Saturday, April 7, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் வீரம்

கும்பகர்ணன் பெரிய வீரன். பெரிய தைரியசாலி. பெரிய பராகிரமம் படைத்தவன்.
அவன் வீரத்தை, தைரியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் ? கம்பன் யோசிக்கிறான்.
இராமன் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் (ஒக்க மாட, ஒக்க பான, ஒக்க பத்தினி). ஒரு வில்லுனா ? எல்லாரும் ஒரு வில்லு தான் வச்சு இருப்பாங்க ? அஞ்சாறு வில்லா தூக்கிட்டு போவாங்க. ஒரு வில்லுனா, ஒரு இலக்குக்கு ஒரு அம்பு தான். குறி தப்பவே தப்பாது. இராமன் அம்பு பட்டால், அம்பு பட்டவன் சாக வேண்டியது தான்.
தாடகைக்கு ஒரு அம்பு. வாலிக்கு ஒரு அம்பு. காரனுக்கு ஒரு அம்பு. பரசுராமனுக்கு ஒரு அம்பு. ஏழு மரா மரங்களை துழைத்தது ஒரு அம்பு. அவ்வளவு ஏன், இராவணனை கொன்றதும் ஒரே ஒரு அம்பு தான் (தடவியதோ ஒருவன் வாளி).
ஆனால் கும்பகர்ணனுக்கு மட்டும் ஒரு அம்பு பத்தவில்லை ? ஒண்ணு பத்தாட்டி ஒரு இரண்டு மூணு அம்பு விட்டு இருப்பாரா ....?
----------------------------------------------------------
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் மார்பம்

திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது

மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடிகணை என்றாலும்

பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெருஞ்சாரி
----------------------------------------------------------
ஆயிரக்கணக்கான அம்புகள் விட்டார்.
பறப்ப ஆயிரம் = பறந்து செல்லும் அம்புகள் ஆயிரம்
படுவன ஆயிரம் = அதில் அவன் (கும்பகர்ணன்) மேல் பட்ட அம்புகள் ஆயிரம்
பகட்டு எழில் மார்பம் = பகட்டான அழகிய மார்பை
திறப்ப ஆயிரம் = திறப்பன ஆயிரம் அம்புகள்
திரிவன ஆயிரம் = அவன் மேல் படாமல் அங்கும் இங்கும் திரிவன ஆயிரம் பாணங்கள்
சென்று புக்கு உருவாது = அவன் மேல் குத்தி பின்னால் வரமால்
மறைப்ப ஆயிரம் = அவன் உடம்புக்குள்ளேயே சென்று மறைந்தன ஆயிரம் அம்புகள்
வருவன = உடம்பை ஊடுருவி பின்னால் வருவன
ஆயிரம் = ஆயிரம் அம்புகள்
வடிகணை என்றாலும் = வடிவான கணை என்றாலும் (அழகிய கூறிய அம்புகள் என்றாலும் )
பிறப்ப = வாயிலிருந்து பெரிய சப்தம் பிறக்க
ஆயிடை = அங்கு
தெழித்துற திரிந்தனன் = அதட்டி கொண்டு திரிந்தனன்
கறங்கு என பெருஞ்சாரி = காற்றாடி காற்றில் பறப்பதை போல் திரிந்தான்
அப்படி என்றால் எவ்வளவு பெரிய வீரன் ? எவ்வளவு வீரம் உள்ளவன் ? எவ்வளவு உடல் உரம் உள்ளவன் ?
இவ்வளவு அம்பு பட்டாலும், சோர்ந்து விடவில்லை. "ஆய் ஊய் " என்று அதட்டி கொண்டு திரிகிரானாம்.....
மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்...கம்பன் கவிநயம் புரியும்
------------------------------------------------------------------------------------------
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடிகணை என்றாலும்
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெருஞ்சாரி
--------------------------------------------------------------------------------------------
(உரை எழுதிய பெரியவர்களுக்கு ஒரு சங்கடம் இருப்பதை பார்க்கிறேன்.
கும்பகர்ணன் பலசாலி என்று சொல்வதற்காக, கம்பன், இராமனின் பலத்தை குறைத்து சொல்லி விட்டதாக அவர்கள் வருத்தப் படுகிறார்கள்.
அது எப்படி கும்ப கர்ணன் இராமனை விட பலசாலியா என்று நினைத்து, இந்த பாடலுக்கு சற்று வேறு விதமாய் பொருள் சொல்கிறார்கள்.
இத்தனை அம்புகளை விட்டது கும்பகர்ணன் மேல் என்று இந்த பாடலில் எங்கே வருகிறது ? இராமர் எல்லார் மேலேயும் இவ்வளவு அம்புகளை விட்டார்...கும்பகர்ணன் அந்த யுத்த களத்தில் இருந்தான் அவ்வளவு தான்...என்று இராமனுக்கு பெருமை சேர்கிறார்கள்.
அவர்களின் நோக்கம் நல்லது தான்.
எனக்கு என்னவோ இது கும்பகர்ணன் மேல் விட்ட அம்புகள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பொதுவாக இராமன் அம்பு விட்டான் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன ? அப்படியே இருந்தாலும், கடைசியில், கும்பகர்ணனை அதில் கொண்டுவந்து சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ?
எது எப்படியோ, அந்த உரை எழுதிய பெரியவர்களின் முன்னால் நான் ஒரு தூசு. அவர்களின் உரையை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவும் தகுதியும் கிடையாது. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.)

1 comment:

  1. What does "Karangu" and "Perunchari" mean in the last line?

    Fantastic poem. I like your explanation better. It is just Kambar's poetic license to express his affection and respect for Kumbakarnan, I think. Nice one.

    ReplyDelete