Thursday, May 24, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உண்மை எல்லாம் நான் அறிவேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உண்மை எல்லாம் நான் அறிவேன்


அவள்: எங்க போயிட்டு வர்ற ?

அவன்: அது வந்து...ஒண்ணும் இல்ல... கோடி ஆத்து பொண்ணுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணிட்டு வர்றேன்

அவள்: என்ன ஒத்தாசை ? அவ கூப்பிட்டா உடனே போயிருவியா ?

அவன்: என்ன பெருசா கேட்டுட்டா ? தயிர் கடஞ்சிகிட்டு இருந்தா....கூட கொஞ்சம் ஒத்தாசை பண்ணினேன்...

அவள்: ஆஹா...உன்னப் பத்தி தெரியாதா, எப்படி உதவி பண்ணி இருப்பேனு? தலையில் உள்ள மயிர் பீலி எல்லாம் கலஞ்சு கிடக்கு, முகம் எல்லாம் முத்து முத்து வேர்த்து இருக்கு, உதடு எல்லாம் துடிக்கிறது...நீ எப்படி ஒத்தாசை பண்ணி இருப்பேனு தெரியறது. உன்ன பத்தி எனக்குத் தெரியாதா ? நீ எப்படி பட்ட கள்ளன் என்று..படவா...


குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 699 ஆவது நல்லாயிர திவ்ய பிரபந்த பாசுரம் இது. 

கெண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடையவன் என்று கள்ள விழி விழித்து புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே



இப்ப பொருள் என்னனு பார்ப்போம்: 

கெண்டை = கெண்டை மீன்

ஒண் கண் = போன்ற கண் உள்ள 

மடவாள் ஒருத்தி = பெண் ஒருத்தி

கீழை அகத்து = தெருக்கோடியில் உள்ள வீட்டில்

தயிர் கடைய = தயிர் கடைய

கண்டு = பார்த்து

ஒல்லை = சீக்கிரம் ("ஐயனை ஒல்லை வா என்று அழைத்ததம்மா" கம்ப இராமாயணம்)

நானும் கடையவன் என்று = நானும் வந்து கூட மாட கடைகிறேன் என்று

கள்ள விழி விழித்து = திருட்டு முழி முழித்து

புக்கு = அந்த வீட்டுக்குள் புகுந்து

வண்டு அமர் பூங்குழல் = வண்டு வந்து அமரும் பூக்களை சூடிய குழல்


தாழ்ந்து உலாவ = அவிழ்ந்து அலை பறக்க

வாண் முகம் = வாண் போன்ற நீல முகம்

வேர்ப்ப = வேர்க்க

செவ்வாய் துடிப்ப = உன் சிவந்த இதழ்கள் துடிக்க

தண் தயிர் = குளிர்ந்த தயிரை

நீ கடைந்திட்ட வண்ணம் = நீ எப்படி அவளோடு கடைந்திருப்பாய் என்று

தாமோதரா = தாமோதரனே

மெய் அறிவன் நானே = அங்க என்ன நடந்திருக்கும் என்ற உண்மையை நான் அறிவேன்

கெண்டை மீன் போன்ற கண் உள்ள பெண் ஒருத்தி


தெருக்கோடியில் உள்ள வீட்டில் தயிர் கடைய

பார்த்து சீக்கிரம் நானும் வந்து கூட மாட கடைகிறேன் என்று


திருட்டு முழி முழித்து

அந்த வீட்டுக்குள் புகுந்து


வண்டு வந்து அமரும் பூக்களை சூடிய குழல்அவிழ்ந்து அலை பறக்க


வாண் போன்ற நீல முகம் வேர்க்க


 உன் சிவந்த இதழ்கள் துடிக்க


குளிர்ந்த தயிரை


 நீ எப்படி அவளோடு கடைந்திருப்பாய் என்று

தாமோதரனே!


 அங்க என்ன நடந்திருக்கும் என்ற உண்மையை நான் அறிவேன்




2 comments:

  1. Kannan mel enna oru possessiveness indha azhwarkalukellam kooda.
    revathi.

    ReplyDelete