Saturday, May 12, 2012

கலித்தொகை - தாயின் மன நிலை


கலித்தொகை - தாயின் மன நிலை

இலக்கியங்கள் கடவுள்களையும், மன்னர்களையும், வீர சாகசம் புரிந்தவர்கையும் பேசிய அளவுக்கு சாதாரண மனிதர்களைப் பேசுவது இல்லை.

அவர்களின் கவலை, ஆசைகள், கனவுகள் இவற்றைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப் படுவது இல்லை.

தமிழில் கலித்தொகை சற்று வித்தியாசமான ஒரு இலக்கியம்.

இது சாதாரண மனிதர்களைப் பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி, அவர்களின் வாழ்கை சிக்கல்களைப் பற்றி பேசுகிறது.

அவள் ஒரு பெண்ணின் தாய்.

அந்தப் பெண்ணோ, அவள் காதலனோடு சென்று விட்டாள்.

ஒரு வேளை தந்தையும், உறவினர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையோ என்னவோ.

என்ன இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா ?

அந்தத் தாய், தன் மகளை தேடித் போகிறாள்.

அவள் எப்படி இருக்கிறாளோ, என்ன ஆனாளோ என்று கவலையோடு தேடுகிறாள்.

எதிரில் ஒரு புலவர் வருகிறார். அவர், அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பயபடாதே, உன் மகள் ஒரு நல்ல ஆண் மகனைத் தேர்ந்தெடுத்து அவனோடு கற்பு நெறியில் சென்று இருக்கிறாள். கவலைப் படாதே என்று.


உன் மகள் என்னைக்கு இருந்தாலும் உன்னை விட்டு போக வேண்டியவள் தானே ?

மலையில் பிறந்தது என்பதற்காக சந்தனத்தை யாரும் அரைத்து மலைக்கு பூசுவது இல்லை.

கடலில் பிறந்தது என்பதற்காக முத்தை யாரும் எடுத்து மாலையாய் கோர்த்து கடலுக்கே அணிவிப்பது இல்லை.

யாழில் இருந்து இசை பிறந்தாலும், அந்த இசை யாழுக்கு சொந்தமில்லை 
அது போல

உன் மகள் உன்னிடம் இருந்து வந்தாலும், அவள் உனக்கு சொந்தமில்லை.

அவள் ஒரு நல்ல துணையை தான் தேடித் போயிருக்கிறாள். ஒன்றும் கவலைப் படாதே என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.



பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும்மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்களால்நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால்நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால்நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என வாங்கு,
இறந்த கற்பினாட்டு எவ்வம் படரன்மின்,
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறந்தலை பிரியா ஆறும் மற்றதுவே
-----------

பலவுறு = பலபேர் பூசும்

நறும்சாந்தம் = மனமுள்ள சந்தனம்

படுப்பவர்க்கு = அதை பூசிக் கொள்பவர்களுக்கு

அல்லதை = இல்லாமல்

மலையுளே பிறப்பினும் = மலையில் பிறந்தாலும்

மலைக்கு = தான் பிறந்த அந்த மலைக்கு

அவைதாம் என் செய்யும்? = அந்த சந்தனத்தால் என்ன பயன்? ஒன்றும் 
இல்லை.

நினையுங்களால் = நினைத்துப் பார்த்தால்

நும்மகள் = உன்னுடைய மகள்

நுமக்கும் = உனக்கும்

ஆங்கு அனையளே, = அது போலத்தான்

சீர்கெழு = சிறப்பான

வெண்முத்தம் = வெண்மையான முத்து

அணிபவர்க்கு அல்லதை = அதை அணிந்து கொள்பவர்க்களுக்கு 
அல்லாமல்

நீருளே பிறப்பினும் = கடலில் பிறப்பினும்

நீர்க்கு அவைதாம் என்செய்யும்? = அந்த கடலுக்கு அவற்றால் என்ன பயன்?

தேருங்கால், = நினைத்துப் பார்த்தால்

நும்மகள் = உன் மகளும்

நுமக்கும் ஆங்கு அனையளே = உனக்கு அப்படித்தான்

ஏழ்புணர் = ஏழு நரம்புகளை கூட்டி உண்டாக்கும்

இன்னிசை = இன்னிசை

முரல்பவர்க்கு அல்லதை = கேட்பவர்களுக்கு அன்றி

யாழுளே பிறப்பினும் = யாழில் இருந்து பிறந்தாலும்

யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? = அந்த யாழுக்கு அவற்றால் என்ன பயன் ?

சூழுங்கால், = யோசித்துப் பார்த்தால்

நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! = உன் மகளும் உனக்கு அப்படித்தான்

என வாங்கு, = என்று நினைத்து

இறந்த = சிறந்த

கற்பினாட்டு = கற்பினை உடைய உன் மகள்

எவ்வம் = துன்பம், கவலை

படரன்மின் = படாதே

சிறந்தானை = சிறந்த ஆண் மகனை

வழிபடீஇச் சென்றனள், = கைப் பிடித்து, அவன் வழி செல்கின்றாள்

அறந்தலை பிரியா = அறத்தினை விட்டுப் பிரியாத

ஆறும் = வழியும்

மற்றதுவே = அதுதான்

3 comments:

  1. என்ன அருமையான பாடல்! ஆஹா! இதை எமக்குக் கொண்டு தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. "கற்பினாட்டு" "அறந்தலை பிரியா"-- ஒரு நிகழ்வை விளக்கும் பொழுது கூடவாழ்வு நெறியை எவ்வளவு அழகாக சொல்லுகிறார்கள். அருமையான பாடல். இன்னும் பல பாடல்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. எமக்கு தொழில் எழுத்து

      இந்த எழுத்து தெய்வம்

      இந்த key board ம் தெய்வம்...:)

      Delete