Wednesday, May 9, 2012

குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


அந்த காலத்தில் ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணை விரும்பி அவர்கள் திருமணத்திற்கு தடை வந்தால் ஆண்மகன் மடலேறுவது என்று ஒரு வழக்கம் உண்டு.

மடலேறுதல் என்றால் என்ன ?

பனை ஓலையில் ஒரு குதிரை செய்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு, தன் படத்தையும், அந்த பெண்ணின் படத்தையும் வரைந்து அந்த படத்தை எடுத்துகொண்டு 
அந்த பொம்மை குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டியது.

ஊரில் எல்லாருக்கும் இந்த பையன் அந்த பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்து விடும். 

அந்த பெண்ணை வேறு யார் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் அந்த ஊரில் ?

எப்படி நம்ம ஆளு technique ? 

வேற வழி இல்லாமல் பெண்ணை பெற்றவர்கள் அந்த பையனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள். 

நம்ம ஆளுங்க கில்லாடிங்க.

இங்க குறுந்தொகையில் இவர் என்ன நினைக்கிறார் பாருங்கள்...

அப்படி எல்லாம் செஞ்சு இந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், 
நாளைக்கு ஊருக்குள்ள என்ன பேசுவாங்க ?

"இந்தா போறான்ல, அந்த தங்கமான பொண்ணோட புருஷன் இவன் தான், அவளை கட்டிக்க, அந்த காலத்ல என்ன கூத்து அடிச்சான் தெரியுமா" 
என்று சொல்வார்கள், அதை கேட்கும் போது எனக்கு வெட்கம் வரும் என்று தலைவர் இப்பவே வெட்கப் படுகிறார்...

அந்த ரௌசு விடும் பாடல்...


அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே   

அந்த காலத்ல இப்ப உள்ள மாதிரி பேப்பர் பேனா எல்லாம் கிடையாது. 

ஓலை சுவடியில எழுதணும். 

ஓலை சுவடி ரொம்ப கிடைக்காது. 

எனவே சொல்ல வேண்டியத சுருக்கமா சொல்ல வேண்டிய நிர்பந்தம். 

நம்ம, கொஞ்சம் பாடலை தளர்த்தி பதம் பிரித்தால் எளிதாகப் புரியும்



அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த 
வார்த்து இலங்கு வை ஏஇற்று சின் மொழி அரிவையையை
பெறுகதில் அம்ம இவ்வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் என்ப 
பல்லோர் கூற யான் நாணுக சிறிதே

அருஞ்சொற் பொருள் 


அமிழ்து பொதி = அமிழ்தத்தை பொதிந்து வைத்த

செந்நா = சிவந்த நாக்கு (வாய், இதழ் என்று கொள்ளாலாம்)

அஞ்ச வந்த = அஞ்சும் படி வந்த

வார்த்து = (அச்சில்) வார்த்து எடுத்தார் போன்ற

இலங்கு வை = இருக்கின்ற

ஏஇற்று = கூறிய பற்கள்

சின் மொழி = சின்ன சின்ன மொழி பேசும்

அரிவையையை = உலகம் அறியா இளம் பெண்ணை

பெறுகதில் = பெற்றால்

அம்ம இவ்வூரே = அப்ப இந்த ஊர்

மறுகில் = மடல் ஏறிய (இந்த வார்த்தையை கொஞ்சம் முன்னால் போடணும்). 

மடல் ஏறி அந்தப் பெண்ணை பெற்றால்

நல்லோள் கணவன் = அந்த நல்ல பெண்ணின் கணவன் 

இவன் என்ப = இவன் என்று

பல்லோர் = எல்லோரும் சொல்லுவார்கள்

கூற = கூறும் போது

யான் நாணுக சிறிதே = நான் சிறிது நாணம் அடைவேன்



1 comment:

  1. அப்பாடி ... இப்பவே என்ன எல்லாம் கற்பனை அய்யாவுக்கு!

    இந்த குறுந்தொகையிலேயே இப்படிப்பட்ட உலக வாழ்க்கையைப் பற்றிய பாடல்கள் நிறைய இருக்கின்றன போலும்.

    பக்தி இல்லாத பாடலைப் பற்றி எழுதியதற்கு நன்றி! மிக எளிய, ஆனால் இனிய, விளக்கம்.

    ReplyDelete