Saturday, May 12, 2012

கம்ப இராமாயணம் - அகலிகை அறிந்து தவறு செய்தாளா ?

கம்ப இராமாயணம் - அகலிகை அறிந்து தவறு செய்தாளா ?


கம்பன் மொத்தம் 25 பாடல்கள் எழுதி உள்ளான்.

பயங்கர கில்லாடி.

அகலிகை அறிந்து செய்தாளா இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியாதபடி பாடல் வரிகள் வார்த்தைகள் அமைந்து இருக்கின்றன.

வாசகனின் முடிவுக்கே விட்டு விடுகிறான் கம்பன்.

கீழே உள்ள பாடல், இந்த படலத்தில் உள்ள ஒரு முக்கியமான பாடல். எப்படி எல்லாம் அதற்க்கு அர்த்தம் சொல்லலாம் என்று பாருங்கள்.


புக்கு அவளோடும். காமப்
புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்லோடும்.
உணர்ந்தனள்உணர்ந்த பின்னும்.
தக்கது அன்று’ என்ன ஓராள்;
தாழ்ந்தனள் இருப்ப. தாழா
முக்கணான் அனைய ஆற்றல்
முனிவனும். முடுகி வந்தான்.

புக்கு = அவள் வீட்டில் புகுந்து

அவளோடும் = அவளோடு

காமப் = காமத்தை தூண்டும்

புது மண மதுவின் தேறல் = புதிய மணமுள்ள மது என்று ஒரு அர்த்தம். புதியதாய் திருமணம் செய்து கொண்டவர்கள் அருந்தும் மது என்று இன்னொரு அர்த்தம்.

ஒக்க உண்டு இருத்லோடும். = ஒன்றாக உண்டு இருக்கும் போது

உணர்ந்தனள் = உணர்ந்தாள்.

உணர்ந்த பின்னும் = உணர்ந்த பின்னும்

தக்கது அன்று’ என்ன ஓராள் = இது சரி அல்ல என்று அறியாமல்

தாழ்ந்தனள் = தாழ்வு என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தம் தெரியுமா ? குறை, கீழான, அடக்கம், அமைதி, தன்னடக்கம், வெகுளி, அடங்கி இருத்தல், தயக்கம், நேரம் கடந்து வருதல்

இருப்ப = இருக்கும் போது.

தாழா = குறைவு இல்லாமல்

முக்கணான் அனைய ஆற்றல் = முக்கண்ணன் (சிவன்) போன்ற சிவனின் ஆற்றலில் கொஞ்சம் கூட குறைவு illaadha

முனிவனும். முடுகி வந்தான். = முனிவன் (கௌதமன்) விரைந்து வந்தான்

உரை ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் ?

புலவர் கீரன்: அகலிகைக்கு குழப்பம் வந்தது. இது தன் கணவன் இல்லையோ என்று சந்தேகம் வந்தது. அவனை விட்டு விலகி விட்டால், ஒரு வேளை மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய இல்லற தர்மத்தில் இருந்து தான் வழுவி விடுவோமோ என்று தயங்கி அந்த செயலுக்கு உடன் பட்டாள்.

அறிஞர் அண்ணா: "உணர்ந்தனள்" என்றால், அவள் உணர்ந்தாள். எப்படி உணர்ந்தாள் ? இதுக்கு முன்னாடியே இந்திரன் இப்படி வந்து போவது உண்டு. அதனால், வந்திருப்பது இந்திரன் என்று அவள் "உணர்ந்தாள்" என்பது அண்ணாவின் வாதம். அண்ணாவிடம் இது பற்றி வாதம் பண்ணிய ரா. பி. சேதுப் பிள்ளை போன்றவர்கள் பதில் சொல்ல முடியாமல் போனார்கள் என்று குறிப்பு உள்ளது.

எது எப்படியோ, இதுக்கு ஒரு முடிவான பதில் சொல்லாமல் கவிதை எழுதிய கம்பன் கில்லாடி தான்.

2 comments:

  1. உணர்வதற்கு "முன்பே வந்து போவது" தேவை இல்லை. ஒரு பெண்ணின் உள்ளுணர்வினால் உண்ர்ந்தாள் என்றும் கொள்ளலாமே.

    அதே சமயம், புலவர் கீரனின் உரையும் அபத்தமாக இருக்கிறது. "தாழ்ந்தனள்" என்றால் பேசாமல் உடன் பட்டாள் என்று பொருள் கொள்வது கடினமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கம்பனின் சிறப்பு அதுதான். இன்னும் சற்று யோசித்தால், வேறு சிலவும் புலப்படும்.

      அந்தக் காலத்தில் முனிவர்களும், முனி பத்னிகளும் மது அருந்தினார்களா ?

      மது அருந்தியதால் புத்தி தடுமாறி அகலிகை தவறு இழைத்தாளா?

      ஒரு பெண்ணுக்கு தன் கணவனின் ஸ்பரிசமும், மற்றவனின் ஸ்பரிசமும் வித்தியாசம் தெரியாதா ?

      கௌதமன், அவர்களை சபித்ததன் மூலம், சாதித்தது என்ன ? இரகசியமாய் இருக்க வேண்டியதை ஊர் எல்லாம் அம்பலமாக்கி அவன் கண்டது தான் என்ன?

      பாவம் அகலிகை.

      Delete