Wednesday, May 2, 2012

திருப் புகழ் - அரை நிமிட தியானம்

திருப் புகழ் - அரை நிமிட தியானம்


காற்றில் ஆடும் தீபம் போல மனம் எங்கே ஒரு நொடி அமைதியாய் இருக்கிறது.

மனதை கட்டுப் படுத்த மகான்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கிறார்கள்.

அருணகிரிக்கு முருகன் உபதேசித்தது எல்லாம் இரண்டே வார்த்தை தான்

"சும்மா இரு". அந்த இரண்டு வார்த்தைக்கு பொருள் தெரியாமல் தவிக்கிறார்.


"சும்மா இரு சொல் அர என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே"

எனப்பார் அவர் கந்தர் அனுபூதியில்.

மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை மனதில் நினைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எங்க முடியுது ?


கண்ணை மூடினால் அலுவலகம், மனைவி, கணவன், பிள்ளைகள், மாமியார், நாத்தினார், கடன் என்று ஆயிரம் எண்ணங்கள் வருகிறது.


கடவுளை எங்க நினைக்க முடிகிறது ? இந்த பிரச்சனை இல்லறத்தில் இருக்கும் நமக்கு மட்டும் அல்ல, துறவியான அருணகிரிக்கும் இருந்து இருக்கிறது.




சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே

------------------------------------------------------------------------------------------------------


சரண கமலாயத்தை அரை நிமிட நேர மட்டில்

தவ முறை தியானம் வைக்க அறியாதசட க

சட மூட மட்டி பவ வினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ

கருணை புரியாது இருப்பது என்ன குறை இவ்வேளை செப்பு
கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே

கடக புய மீதில் ரத்ன மணி அணி பொன் மாலே செச்சை
கமழும் மண மார் கடப்ப அணிவோனே

தருணமிது ஐயா மிகுந்த கனம் அது உறு நீள் சௌக்ய
சகல செல்வ யோக மிக்க பெரு வாழ்வு

தகைமை சிவா ஞான முக்தி பர கதியும் நீ கொடுத்து
உதவி புரிய வேணும் நெய்த்த வடிவேலா

அருணா தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
அறிய தமிழ் தான் அளித்த மயில் வீரா

அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மீது உதித்த
அழக திருவேரகத்தின் மருகோனே

-----------------------------------------------------------------------------------------------

சரண கமலாயத்தை = உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை


அரை நிமிட நேர மட்டில் = அரை நிமிட நேரம் கூட


தவ முறை = தவ முறைகளின் படி


தியானம் வைக்க அறியாத = மனதில் வைக்க முடியாத


சட = பொய்யும்


கசட = ஒன்றுக்கும் உதாவத (நல்லது எல்லாம் போன பின் நிற்கும் கசடு)


மூட = முட்டாள்


மட்டி = தடியன்


பவ வினையிலே சனித்த = பொல்லாத இருவினையில் பிறந்த 


தமியன் = தனியாய் இருப்பவன்


மிடியால் = சோம்பலால்


மயக்கம் உறுவேனோ = குழப்பம் அடைவேனோ


கருணை புரியாது இருப்பது = நீ கருணை புரியாமல் இருக்க


என்ன குறை இவ்வேளை செப்பு = என்ன காரணம், சொல்லு


கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே = சிவ பெருமான் பெற்ற மகனே


கடக புய மீதில் = வீர கடகம் அணிந்த கையில்


ரத்ன மணி அணி பொன் மாலே செச்சை = ரத்னம், மணி, பொன் ஆபரணங்கள், மற்றும் வெட்சி பூ மாலை


கமழும் மண மார் கடப்ப அணிவோனே = கடம்ப மாலை மணக்கும் மார்பை உடையவனே


தருணமிது ஐயா = இதுதான் சமயம்


மிகுந்த கனம் அது உறு நீள் சௌக்ய = நீண்ட நாள் உள்ள சுகம்


சகல செல்வ = எல்லா செல்வமும்


யோக மிக்க பெரு வாழ்வு = யோகமும் கூடிய பெரு வாழ்வும்


தகைமை = நன் மதிப்பு, பெருமை, புகழ்


சிவா ஞான = சிவ ஞானம்


முக்தி = வீடு பேறு

பர கதியும் = உயர்ந்த கதி


நீ கொடுத்து உதவி புரிய வேணும் = you have to help me

நெய்த்த = பள பளப்பான (நெய் தடவிய வேலாய் இருக்குமோ). (நீண்டுகுழன்று நெய்த்திருண்டு நெறிந்து செறிந்து நெடுநீலம்...கம்ப இராமாயணம்)

வடிவேலா = அழகான வேலை கொண்டவனே


அருண தள பாத பத்மம் = சிவந்த தாமரை மலர் போன்ற உன் பாதங்களை (அருணன் = சூரியன். அருணன் இந்திரன் திசை போய் அனுகிணன் - திரு வாசகம்)


அது நிதமுமே துதிக்க = தினமும் துதிக்க


அறிய தமிழ் தான் அளித்த மயில் வீரா = சிறந்த தமிழை அளித்த மயில் மேல் வரும் வீரனே


அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மீது உதித்த = அனேக அதிசம் நடந்த பழனி மலை மீது உதித்த


அழக திருவேரகத்தின் முருகோனே = அழகனே, திருவோரகத்தில் உள்ள முருகனே




2 comments:

  1. Can you please repost this blog after splitting the lines of the poem? It is mixed up into one line. Thanks

    ReplyDelete