Monday, June 4, 2012

குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


அவன் இருக்கும் இடம் என் ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருக்கிறது.

என்னை பார்க்க அடிக்கடி வருவான்.

என் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பு.

அவன் வரும் வழியோ சரியான சாலை வசதி இல்லாத, மலை பாங்கான இடம்.

அங்கே மரத்திற்கு மரம் குரங்குகள் தாவிக் கொண்டு இருக்கும்.

ஒரு நாள் அப்படித்தான்,தாவும் போது, ஒரு ஆண் குரங்கு கை தவறி கீழே விழுந்து இறந்து விட்டது.

அதன் பிரிவை தாங்காத பெண் குரங்கு, முழுதும் வளராத தன் குட்டியையை அதன் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தானும் அந்த மலையில் இருந்து கீழு விழுந்து உயிரை விட்டுவிட்டது.

குரங்குக்கும் கை தவறும் ஆபத்தான இடம் அவன் வரும் வழி.

அது மட்டும் அல்ல, குரங்குகள் கூட தங்கள் ஜோடிகளிடம் அபரிமிதமான அன்பை செலுத்தும் ஊர் அவன் ஊர்.

அவன் வரவில்லை என்றால் அவனை தேடுகிறது.

வரவேண்டும் என்றால், இவ்வளவு ஆபத்தை கடந்து வர வேண்டுமே ?

அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால். அதுக்கு அவன் வராமலேயே இருப்பது நல்லது.

இப்படி அந்த குறுந்தொகை காதலியின் மனம் கிடந்து அலை பாய்கிறது.






கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே'




கருங்கண் = கரிய கண்களை உடைய (குரங்கு)

தாக்கலை = வருத்தத்தை தரக்கூடிய

பெரும்பிறிது = பெரிய பிரிவு = இறப்பு.

உற்றெனக் = நிகழ்ந்தது என

கைம்மை = விதவை கோலம், துணையை இழந்த நிலை

உய்யாக் = விருபாத

காமர் மந்தி = காதல் கொண்ட பெண் குரங்கு

கல்லா = (மரம் விட்டு மரம் தாவும் கலையை முழுவதும்) கல்லாத

வன்பறழ் = தன் குட்டிகளை

கிளை முதல் = உறவினர்களிடம்

சேர்த்தி = சேர்த்து

ஓங்குவரை = உயர்ந்த மலையில்

அடுக்கத்துப் பாய்ந்து = தாவி பாய்ந்து

உயிர் செகுக்கும் = உயிரை விடும்

சாரல் நாட = மலை நாட்டை சேர்ந்தவனே

நடு நாள் = இரவில்

வாரல் வாழியோ = (அந்த வழியாக) வராமல் இருப்பது நல்லது. நீ வாழ்க

வருந்துதும் யாமே' = (நீ அந்த வழியாக வருவதை நினைத்தால்) நாம் வருந்துவோம்


2 comments:

  1. குரங்கைப் பற்றிய கதை கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது!

    "வாரல் வாழியோ வருந்துதும் யாமே" என்றால், "வராமல் வாழ்க, நான் வருந்தினாலும்" எனலாமா?

    ReplyDelete
    Replies
    1. "கருங்குரங்கு இறந்து விட,பிரிவைத் தாங்காத மந்தி,தன் கல்லாத குட்டிகளை சுற்றத்திடம் ஒப்படைத்து விட்டு,மலை முகட்டிலிருந்து குதித்து உயிர் விடும் மலைச் சாரல் நாடனே!
      இரவில் வராதே நாங்கள் கவலைப்படுவோம் நீ வாழ்க"

      இது சுஜாதாவின் உரை. எப்படி இருக்கு ? நச்னு இருக்கா ?

      Delete