Sunday, June 3, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்


கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்


இராவணனைப் போன்ற ஒரு கலைஞனை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

இராமனின் அம்பு பட்டு, உடல் எல்லாம் புண்ணாகி அரண்மனை வருகிறான்.

அவன் பாட்டனிடம் இராமனின் வில்லாற்றலை விவரிக்கிறான்...எப்படி ?

"இராமனின் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டு வந்தன ... எப்படி தெரியுமா ?

நல்ல கவிஞர்களின் நாவில் இருந்து வரும் சிறப்பான சொற்களைப் போல.

அது மட்டுமா? அந்த சொற்கள் சேர்ந்து ஒரு இலக்கண ஒழுங்கோடு (தொடை) இருப்பதைப் போல அந்த அம்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு ஒழுங்கோடு வந்தன.

சிறந்த சொல்லும், இலக்கணமும் இருந்து விட்டால் போதுமா ? நல்ல இசை நயம் வேண்டாமா ? இசையோடு கூடிய, இலக்கண வரைமுறையில் வந்த பொருள் செறிந்த கவிஞனின் சொற்களை போல இராமனின் அம்புகள் வந்தன என்று தன்னை துன்புறுத்திய அம்புகளை கூட கவி நயத்தோடு இரசித்த இராவணன் எப்பேர்பட்ட கலைஞன்"

அந்தப் பாடல்.....

நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட தொடை என,தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ.

நல் இயல் = நல்ல விஷயங்களை எழுதும்

கவிஞர் நாவில் = கவிஞர் நாவில்

பொருள் குறித்து = சிறந்த பொருள் தருவதற்கு

அமர்ந்த நாமச் = வந்து அமர்ந்த சிறந்த

சொல் என,= சொற்கள் என

செய்யுள் =அப்படி பட்ட கவிதையில்

கொண்ட தொடை என = உள்ள இலக்கண ஒழுங்கு என (தொடை என்பது ஒரு யாப்பு உறுப்பு)

தொடையை நீக்கி = அந்த இலக்கண வரைமுறைகளையும் தாண்டி

எல்லையில் சென்றும் = இறுதி வரை சென்று

தீரா இசை என = என்றும் முடியாத இசை என

பழுது இலாத = குறை ஒன்றும் இல்லாத

பல் = பலவிதமான

அலங்காரப் பண்பே = அலங்காரப் பண்பே (சிறப்புகளை கொண்டதே)

காகுத்தன் பகழி மாதோ. = இராமனின் அம்புகள் ஆகும்

நல்ல விஷயம். சிறந்த சொற்கள். இலக்கண சுத்தம். இசையோடு இணைந்த சொற்கள்....இப்படி சிறந்த கவிதை போல இருந்தது இராமனின் அம்புகள் என்று பகைவனின் வீரத்தை இரசிக்கும் இராவணன் சிறந்த கலைஞன் தானே ?


(Appeal: if you like this blog, please click g+1 button below, to express your liking)

1 comment:

  1. சிறந்த கவிஞன் மட்டும் அல்ல, சிறந்த வீரனும் கூட. இல்லையென்றால் எதிரியின் வில்லாற்றலைப் புகழ முடியுமா?

    ReplyDelete