Wednesday, July 4, 2012

கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


வால்மீகி எழுதிய இராமாயணம் 24000 பாடல்களை கொண்டது.

அதை கம்பர் தமிழில் எழுதினார். கம்ப இராமயாணம் 11000 பாடல்களை கொண்டது.

வால்மீகி எழுதியதை தான் தமிழில் எழுத முற்பட்டதை "எல்லோரும் வாய் அசைத்து பேசுகிறார்களே என்று ஊமையனும் பேச முற்பட்டது போல் வால்மீகி எழுதியதை நான் தமிழில் எழுத முற்படுகிறேன்" என்று அவை அடக்கத்துடன் சொல்கிறார் கம்பர். 

கம்பனே அப்படி சொல்கிறான் என்றால், வால்மீகி எப்படி பட்ட கவிஞராய் இருக்க வேண்டும். 

நாம் பெற்ற பேறு, இந்த மாதிரி மகான்கள் பிறந்த நாட்டில் நாமும் பிறந்து இருக்கிறோம்.
நாம் பெற்ற பேறு, அவர்கள் எழுதி வைத்ததில் ஒரு சில வரிகளையாவது நாம் வாசிக்கிறோம்.

கம்பனின் அந்த அவையடக்கப் பாடல்:

  

வாங்க அரும்பாதம் நான்கும்
   வகுத்த வான்மீகி அன்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத்
   தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன்புகழ்ந்த நாட்டை,
   அன்பு எனும் நறவம் மாந்தி, 
மூங்கையான் பேசலுற்றான் என்னை,
   யான் மொழிய லுற்றேன்.


வாங்க அரும்பாதம் நான்கும் = வால்மீகி முதன் முதலாக நான்கு வரிகளில் சுலோகம் எழுதினார். அவருக்கு முன்னால் அப்படி யாரும் எழுதவில்லை. பாதம் என்றால் "பதம்" என்று கொள்ளலாம். அவர் எழுதிய அருமையான நான்கு வரிகளை. 

வகுத்த = எழுதிய

வான்மீகி அன்பான் = வான்மீகி என்ற அன்பான்

தீம் கவி, = சுவையான கவிகளை

செவிகள் ஆரத் = செவிகள் குளிர

தேவரும் பருகச் செய்தான்; = தேவர்களும் பருகச் செய்தான்

ஆங்கு, = அங்கு

அவன்புகழ்ந்த நாட்டை, = அவன் புகழ்ந்த அயோத்தி என்ற நாட்டை

அன்பு எனும் = அன்பு என்ற

நறவம் மாந்தி,  = கள்ளினை உண்டு

மூங்கையான்  = ஊமையான்

பேசலுற்றான் என்னை = பேச முனைந்ததைப் போல

யான் மொழிய லுற்றேன். = நானும் (இராமயணத்தை) சொல்லத் தொடங்கினேன்

தான் பாடிய பாடல்களை 'கள் குடித்தவனின் உளறல்கள்' என்கிறார் கம்பர். அதுவும் கள் குடித்த ஊமையனின் உளறல் என்கிறார். 

என்ன ஒரு அடக்கம்.

1 comment:

  1. கம்பரே இப்படி எழுதினால் நாம் பேசுவது எல்லாம் உளறல் மட்டுமே. முதல் முறை இந்த பாடல் பற்றி கேள்விப்படுகிறேன். நன்றி.

    ReplyDelete