Thursday, August 16, 2012

வில்லி பாரதம் - விரல் எனும் சாளரம்


வில்லி பாரதம் - விரல் எனும் சாளரம்


அவளுக்கு அவன் மேல் மிகுந்த காதல். அவனை பார்க்க வேண்டும் என்று தீராத ஆசை.

பார்க்கவும் வெட்கம். 

அவள், அவனை பார்க்கும் போது, அவளை வேறு யாரவது பார்த்து விட்டால் ?...ஐயோ எவ்வளவு வெட்கக்கேடு என்று உள்ளாடும் பயம்..

அவனை பார்க்கும் போது கையால் தன் முகத்தை மூடிக் கொள்வாள்...பின்னும் ஆசை யாரை விட்டது ?

தன் விரல்களை மெல்ல விலக்கி, விரலிடுக்கின் வழியே அவனைப் பார்ப்பாள். 
அது ஏதோ ஜன்னல் (சாளரம்) கம்பிகளின் பின்னே இருந்து "சைட்"அடிப்பது மாதிரி இருக்கிறது....
 

மெய்கொண்டமொழிவிசயன்மெய்யினெழி லிமையாமன்மேன்
                                   மேனோக்கும், 
மைகொண்டகுழலொருத்திமற்றவன்செங் கையிற்சி 
                             விறிமழைகண்டஞ்சிப், 
பொய்கொண்டுவகுத்தனையமருங்கசையத்தனபாரம்புளகமேறக்,
கைகொண்டுமுகம்புதைத்துத்தன்விரற்சாளரங்களிலேகண்கள்
                                       வைத்தாள்.


மெய்கொண்டமொழி = எப்போதும் உண்மையே பேசும்

விசயன் = அர்ஜுனன்

மெய்யினெழி லிமையாமன் = மெய்யின் + எழில் + இமையாமல் = அவன் மேனி 
எழிலை கண் இமைக்காமல் 

மேன் மேனோக்கும் = மேலும் மேலும் நோக்கும்  

மைகொண்ட = கரிய மை போன்ற

குழலொருத்தி = குழலை கொண்ட ஒரு பெண்

மற்றவன் = அந்த அர்ஜுனனின்

செங் கையிற் = சிவந்த கைகளில் இருந்து

சிவிறிமழைகண்டஞ்சிப் = (ஆற்றில் குளிக்கும் போது) விசிறிய மழை போன்ற 

நீர் துளிகளுக்கு அஞ்சி 

பொய்கொண்டு = பொய்யை கொண்டு (இல்லாததை கொண்டு )

வகுத்தனைய = செய்ததை போல

மருங்கசையத் = (இருந்த ) இடுப்பு அசைய

தன பாரம் = மார்பகங்கள்

புளகமேறக் = விம்மி ஏறக்

கைகொண்டு = தன் கைகளால்

முகம்புதைத்துத் = முகத்தை புதைத்து

தன்விரற்சாளரங்களிலே = விரலால் கட்டிய சாரங்களில்

கண்கள் வைத்தாள்.= கண்கள் வைத்தாள்

சைட் அடிக்கிறதுக்கு இவ்வளவு வருணனையா...!!!

1 comment:

  1. வில்லி பாரதம் ஏன் இவ்வளவு கடினமான மொழியாக இருக்கிறது?

    ReplyDelete