Wednesday, August 22, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தழுவினால் உருகுமோ ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தழுவினால் உருகுமோ ?


வெண்கலம், இரும்பு போன்ற உலோகத்தில் பாத்திரம் செய்ய, முதலில் ஒரு mould செய்வார்கள். 

முதலில் அந்த பாத்திரம் மாதிரி களி மண்ணில் ஒரு வடிவம் செய்வார்கள்.

அந்த வடிவத்தின் மேல் மெழுகை ஊற்றுவார்கள்.

அந்த மெழுகின் மேல் மீண்டும் களி மண்ணை பூசுவார்கள்.

நன்றாக, காய்ந்த பின், இரண்டு களிமண்ணுக்கு இடையே உள்ள மெழுகை 

உருக்கி வெளியே கொண்டு வந்து விடுவார்கள்.

மெழுகு இருந்த இடம் வெற்றிடமாய் இருக்கும்.

அந்த வெற்றிடத்தில், உருகிய உலோக குழம்பை ஊற்றுவார்கள்....

பின், அந்த களி மண்ணை தண்ணீர் விட்டு கரைத்து விடுவார்கள்....

அருமையான உலோக பாண்டம் கிடைத்து விடும். 
 
இந்த சட்டி பானை செய்வதற்கும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திர்க்கும் என்ன சம்பந்தம்....?

ஆண்டாள், மழை மேகத்தை பார்த்து கூறுகிறாள்...

அந்த வேங்கடத்து அழகன் என்னைத் தழுவி என் உள்ளம் புகுந்து என் உள்ளிருந்த அழுக்கை எல்லாம் நீக்கி விட்டான்....மழையே நீ என் மேல் பொழிந்து என் வெளி அழுக்கை எல்லாம் நீக்குவாயா என்று கேட்கிறாள்...அவன் என்னோடு கலந்து நிற்பதால், உள் அழுக்கும் வெளி அழுக்கும் போன பின் நானும் அவனும் ஒன்றாய் கலந்து நிற்ப்போம்...

படித்துப் பாருங்கள்...மழைச் சாரல் உங்களை நனைக்கும், மனம் மெல்ல உருகும், கரையும்...


மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

சீர் பிரித்த பின்:

மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்ற
மெழுகு ஊற்றினால் போல ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகர் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட
தழுவ நின்று என்னை தகர்த்தி கொண்டு ஊற்றவும் வல்லையே ?

பொருள்:

மழையே மழையே  = மழையே மழையே

மண் புறம் பூசி = (களி) மண்ணை வெளியே பூசி

உள்ளாய் நின்ற = உள்ளே இருக்கும்

மெழுகு ஊற்றினால் போல = மெழுகு உருகி வருவதைப் போல

ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற = நீர் ஊற்றுகள் நிறைந்த வேங்கடத்துள் 
உள்ள

அழகர் பிரானார் = அழகர் பிரானார்

தம்மை = அவரை

என் நெஞ்சத்து அகப்பட = என் மனதின் உள்ளே

தழுவ நின்று = தழுவி நின்று

என்னை தகர்த்தி கொண்டு = என்னை வெளியே தகர்த்த 

ஊற்றவும் வல்லையே ? =  உன்னால் முடியுமா மழையே...

சில சமயம் வார்த்தைகள் சொல்லாததை வாக்கியம் சொல்லும்.
சில சமயம் வாக்கியம் சொல்லாததை முழு கவிதை சொல்லும்
சில கவிதைகளை முழுதுமாக புரிந்து கொள்ள முடியும்....வார்த்தை வார்த்தையாக பிரித்தால் ஒரு பொருள் வேளை நழுவி போய்விடலாம்...
ஒரு குழந்தையை பார்த்தால், அதன் அழகு எங்கு இருக்கிறது என்று தேடிக் கொண்டு இருக்கக் கூடாது...காதிலா, மூக்கில்லா, கண்ணிலா என்று...எல்லாம் சேர்த்ததுதான் அழகு...

இந்த பாசுரம் அப்படி ஒரு பாசுரம்...



1 comment: