Sunday, August 26, 2012

கம்ப இராமாயணம் - எம்மையும் தருவன


கம்ப இராமாயணம் - எம்மையும் தருவன 


இராமாயணத்தில், பரதனும் இராமனும் கங்கை ஆற்றின் கரையில் சந்திக்கும் இடம் உணர்ச்சிகளின் உச்சகட்டங்களில் ஒன்று. 

ஒரு புறம் நைந்து, நெகிழ்ந்து, உருகி நிற்கும் பரதன்

மறுபுறம், முதலில் வெகுண்டு, பின் பரதன் மேல் கொண்ட பாசத்தால் கண்ணீர் வார்த்து நிற்கும் இலக்குவன்

இன்னொரு  புறம், தீராத காதலன் குகன்

இவர்களோடு வசிட்டன், மந்திரிகள், மக்கள் எல்லாம் இராமனை அந்த கோலத்தில் கண்டு வருந்தி, எப்படியாவது அவனை தங்களோடு கூட்டிக் கொண்டு செல்ல விரும்பும் கூட்டம்

பரதன் எவ்வளவோ சொல்கிறான், "வா, வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள் "என்று. வசிட்டனும் அது தான் சரி என்கிறான். 

இராமன் மறுத்து விடுகிறான். 

சரி, இனிமேல் இராமனை வற்புறத்த முடியாது என்று தெரிந்து கொண்டு, பரதன் நாட்டை ஆள சம்மதிக்கிறான். 

போகும் போது, இராமனின் பாதுகைகளை கேட்கிறான். 

இராமனும் தந்தான்...எதை ?


விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் ‘அரிது ‘என எண்ணி ஏங்குவான்
‘செம்மையின் திருவடித் தலம் தந்தீக ‘என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

விம்மினன் பரதனும் = பரதனும் மனம் விம்மி

வேறு செய்வது ஒன்று = வேறு ஒன்று செய்வது

இன்மையின் = இல்லாததால்

‘அரிது ‘என எண்ணி ஏங்குவான் = ஒன்றும் செய்ய 

முடியவில்லையே என்று எண்ணி ஏங்கி

செம்மையின் = செம்மையான

திருவடித் தலம் = திருவடி இருக்கின்ற தலம், அதாவது பாதுகை

தந்தீக ‘என = தந்து ஈக. தானமாக கொடு என்று வேண்டினான்

எம்மையும் தருவன = எம்மையும் தருவன

இரண்டும் நல்கினான். = இரண்டையும் தந்தான்

''எம்மையும்" என்றால் என்ன ?

எம்மையே எமக்குத் தரும் என்று கொள்ளலாம்.

"தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை" 

என்று பின்னொரு இடத்தில் கம்பன் கூறுவான். 

இம்மைக்கும், மறுமைக்கும் எல்லாவற்றையும் தரும் என்ற பொருளில், "எம்மையே " என்றான். 

எல்லா இன்பங்களையும் தரும் என்ற அர்த்தத்தில் "எம்மை" என்று பொருள் சொல்வாரும் உண்டு. 


1 comment:

  1. இம்மையும் மறுமையும் சேர்ந்தால் எம்மை ஆகுமோ?

    ReplyDelete