Wednesday, August 8, 2012

சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


அவனுக்காக அவள் காத்து இருக்கிறாள். இன்று அவன் வரும் நேரம்.

தலைக் குளித்து, விரித்த கூந்தலுக்கு அகில் புகை போடுகிறாள்.

அப்படி விரிந்த கூந்தல் புகையோடு கூடிய பின்னணியில் அவள் முகம் கரிய மேகங்களுக்கு பின்னே உள்ள நிலவு போல் தெரிகிறது.

அலை பாயும் கூந்தல், புகை சூழ்ந்த நேரம்...புன்னகை கொண்ட அவள் முகம்...குளிர் நிலவு போல் இருக்கிறது...

அந்த குளிர் முகத்தில் வில் போல இரண்டு புருவங்கள்...

அந்த புருவங்களுக்கு கீழே...அவன் பிரிவால் உறங்காமல் சிவந்த இரு விழிகள்...

அந்த விழிகள் மீன் கொடி கொண்ட மன்மதனின் வில்லை துறந்த அம்பு போல் என்னிடம் தூது வந்து என் பிரிவின் வேதனையை அதிகப் படுத்தியது.

அதே கண்கள் என்று அந்த வேதனைக்கு மருந்தாவும் உள்ளது .



அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர் அரி பரந்த செழும்கடைத் தூதும்
மருந்தும் ஆயது இம்மாலை…

அகில் உண விரித்த = அகில் புகை சூழ விரிந்த


அம் மென் கூந்தல் = அந்த மென்மையான கூந்தல்

முகில்நுழை = மேகத்தின் உள்ளே நுழையும்

மதியத்து = நிலவு போல

முரி = தோற்கச் செய்யும்

கரும் = கரிய

சிலைக்கீழ் = வில்லின் கீழ் (வில் போன்ற புருவம்)

மகரக் கொடியோன் = மீன் கொடி கொண்ட மன்மதன்

மலர்க்கணை = மலர் அம்புகள்

துரந்து = துரத்த

சிதர்  = சிதற, அலைபாயும் கண்கள்

அரி பரந்த = செவ்வரி ஓடிய (சிவந்த கண்கள், தூங்காத கண்களோ ?)

செழும்கடைத் தூதும் = என்னிடம் தூது வந்து என்னை துயர் படுத்தின

மருந்தும் ஆயது இம்மாலை…= அதே கண்கள் இப்போது, இந்த மாலை நேரத்தில் அந்த நோய்க்கு மருந்தாக உள்ளன

1 comment:

  1. இது யார் பாடும் பாடல்?

    ReplyDelete