Wednesday, September 5, 2012

முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


 முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


அவன் அந்த நாட்டின் தலைவன். அரசன். 

அந்த ஊரில் பெண்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறார்கள். (ஜொள்ளு).

கொப்பும் குலையும், மப்பும் மந்தாரமுமாய் இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் போதும், காதல் வயப் பட்டு, சோறு தண்ணி இல்லாமல், தூக்கம் இல்லாமல் மெலிந்து துவண்டு பொலிவிழந்து போகிறார்கள். 

ஏதோ அவன் வந்து அவர்கள் அழகை கவர்ந்து கொண்டு போன மாதிரி இருக்கிறது. அவனைப் பார்த்த பின் அவர்கள் அழகு காணாமல் போய் விடுகிறது. அப்ப அவன் தான திருடிக் கொண்டு போய் இருக்க வேண்டும் ? 

அப்படி அழகை திருடி கொண்டு போகும் மன்னன் எப்படி ஒரு நல்ல செங்கோல் செலுத்தும் அரசனாக இருக்க முடியும் ?


பாடல் 

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

பொருள்


வரைபொரு = (வரை = மலை ). மலையோடு பொருதிய (மோதிய, சண்டை இட்ட)

நீள்மார்பின் = நீண்ட அகன்ற மார்பில் 

வட்கார் வணக்கும் = எதிரிகளும் வணங்கும் 

நிரை = வரிசை

பொரு வேன் = சண்டை இடும் வேல் 

மாந்தைக் = எதிரிகளை அழிக்கும், அவர்கள் ஆற்றலை குன்றச் செய்யும் 

கோவே! = அரசனே  

நிரை வளையார் = வலையகள் அணிந்த பெண்களின்

தங்கோலம் = அவர்களின் கோலத்தை, இளமையை, அழகை

வவ்வுதல் = கவர்ந்து செல்லுதல்

ஆமோ = சரி தானோ ?

அவர் தாய்மார் = அந்த இளம் பெண்களின் அம்மாக்கள்

செங்கோலன் அல்லன் என! = நீ செங்கோலன் அல்ல என்று சொல்லுவது (சரி 
தானோ ?)
 

1 comment:

  1. கவிதை என்பதே ஆழகான பொய்தான் என்று தோன்றுகிறது.

    ReplyDelete