Saturday, October 13, 2012

இலக்கியம் என்றொரு கால இயந்திரம்

இலக்கியம் என்றொரு கால இயந்திரம்


உங்களுக்கு ஒரு கால யந்திரம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏறி நீங்கள் காலத்தில் பின்னோக்கி போகிறீர்கள். ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னால் போய் விட்டீர்கள். அந்த கால எந்திரத்தில் இருந்து இறங்கி நீங்கள் நடக்கிறீர்கள். அதே தமிழ் நாடு. 

தார்ச் சாலை இல்லை. மின்சாரம் இல்லை. தொலை பேசி இல்லை. கணனி இல்லை. அந்த தெருவோரம் சில பெண் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாட்டு வண்டிகள். தொழிற்சாலைகள் இல்லாதாதல் புகை இல்லை. வண்டிகள் எழுப்பும் ஒலி இல்லை. மூச்சு  முட்டும் அமைதி. எங்கும் வயல் வரப்புகள். பச்சை பசேல் என்று எங்கு திரும்பினாலும் பசுமை. சில குடிசைகள் தென் படுகின்றன. 

ஒரு குடிசையின் முன்னால் சில பெண் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

உங்களால் நம்ப முடியுமா ? அதில் ஒரு பெண் தான் நீங்கள் உருவாகக் காரணம் ஆனவள் என்று ? உங்களின் மூலம் அவள். நீங்கள் அவளின் சந்ததி. அவளில் இருந்து பிறந்த நதியில் நீங்கள் ஒரு கிளை. 

அவளோடு பேச உங்களுக்கு கொள்ளை ஆசை. அவளிடம் போய் அவள் பெயரை கேட்கிறீர்கள். அவளும் சொல்கிறாள். "நான் யார் தெரியுமா " என்று கேட்கிறீர்கள் . தெரியாது என்று அவள் தலை ஆட்டுகிறாள். 

அவள் தான் உங்கள் தாயின் தாயின் தாயின் தாயின்....தாய். 

அப்படி ஒரு கால இயந்திரம் கிடைத்தால் எப்படி இருக்கும் ? கிடைத்தால் அதில் ஏறி போய் வருவீர்களா ? 

அப்படி சவாரி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள் ? 

அப்படி ஒரு இயந்திரம் இருக்கிறது. அது தான் இலக்கியம். 

அதில் நீங்கள் ஏறி ஆயிரம் ஆண்டுகளை நொடி நேரத்தில் கடந்து சென்று விடலாம். அன்று நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை. அவர்கள் உண்ட உணவு, அவர்களின் பழக்க வழக்கங்கள். அவர்களின் சிந்தனைகள், அவர்களின் ஆசைகள், கனவுகள் எல்லாம் உங்கள் முன் விரியும்.  

நான் இது வரை இலக்கிய சுவைக்காக எழுதி வந்தேன். 

இனி கொஞ்சம் நம் முன்னோர்களின் வழக்கை, அவர்களின் மன நிலை, அவர்களின் கனவுகள், கற்பனைகள் எல்லாவற்றையும் பார்ப்போம். 

வாருங்கள், இலக்கிய கால் எந்திரத்தில் ஏறி ஒரு வலம் வருவோம்.

1 comment:

  1. இலக்கியப் பயணம் என்பது இதுதானோ?! பயணிக்க நான் தயார்!

    ReplyDelete