Wednesday, October 17, 2012

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


இறைவன் மேல் பயம் கொள்வது ஒரு நிலை. பக்தி செய்வது மற்றொரு நிலை. நன்றி செலுத்துவது இன்னும் ஒரு நிலை. அன்பு செலுத்துவது உன்னத நிலை.

எனக்கும் அவளுக்கும் இடையே உயர்வு தாழ்வு இல்லை. உயர்வு தாழ்வு இருந்தால் பயம் வரும். பக்தி வரும். 

அவள் தந்து நான் பெற்றால் நன்றி வரும். எங்களுக்குள் அப்படி எந்த பேதமும் கிடையாது. 

அன்பு ஒன்றே எங்களுக்குள்.

அவளின் அழகு அப்பேற்பட்டது. பார்த்தவுடன் அன்பு தானாகவே வரும். அவளின் தோற்றம் என்னை அவள் மேல் அன்பு செய்ய வைத்தது. அது ஒண்ணும் நான் முயன்று செய்ததில்லை. அவள் வந்தால். அன்பு பிறந்தது. 

அவளைப் பார்த்த பின், காலமே நின்று போனமாதிரி இருக்கு. எது பகல், எது இரவு, எது என்ன கிழமை, எது என்ன பருவம் ஒன்றும் தெரியவில்லை. எந்நேரமும் அவள் நினைப்பே தான். "இனி எண்ணுதற்கு சமயங்களும் இல்லை".

இந்த மனித பிறவி பெற்றதின் பலன் அவளைப் பார்த்தது, அவள் மேல் அன்பு வைத்தது. முக்தி இதுதான். சொர்க்கம் இதுதான். வீடு பேறு இதுதான். இனி சென்று பிறப்பது ஒன்று இல்லை. இனி என்னை கருவில் சுமக்க ஒரு தாயும் இல்லை. நான் அவளுள் அடங்கி விட்டேன். இனி வேறு எங்கு போய் பிறப்பது. 

இது தான் அந்தம். இது தான் முடிவு. அவள் தான் எல்லாம்.

அவளைப் பார்த்த பின் மற்ற பெண்களை பார்த்தால் ஒண்ணுமே தோன்ற மாட்டேன் என்கிறது. அவளை கடந்து என்ன இருக்கிறது ?  மற்ற பெண்கள் மேல் இருந்த ஆசை எல்லாம் அமைதி பெற்று விட்டது. அடங்கவில்லை, அமைதி ஆகி விட்டது. அடங்கினால், அடக்கினால் ஒரு வேளை மீண்டும் எழலாம். எது அமைதி. சலனம் அற்ற மனம். மற்ற பெண்களை பார்த்தால் ஒரு சலனமும் மனதில் எழவில்லை. மனம் நிர்மலாமாய் இருக்கிறது. தெளிந்த நீர் பரப்பு போல. 

பாடல்

உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு 
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச் 
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, 
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.


பொருள்

உமையும் = உமையாகிய அபிராமியும்

உமையொருபாகனும், = அவளை ஒரு பாகத்தில் கொண்ட இறைவனும்

ஏக உருவில் வந்து = ஒரே வடிவமாக வந்து

இங்கு = இங்கு 

எமையும் = என்னையும்

தமக்கு அன்பு செய்யவைத்தார் = அவர்கள் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். நானாகச் செய்யவில்லை. அவர்கள் செய்ய வைத்தார்கள். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

இனி = இனிமேல்

எண்ணுதற்குச் = எண்ணிப் பார்க்க 

சமையங்களும் இல்லை = நேரம் இல்லை (மதங்கள் இல்லை என்று பொருள் சொல்வாரும் உண்டு)

ஈன்றெடுப்பாள் = என்னை பெற்றுடுக்க

ஒரு தாயும் இல்லை, = ஒரு தாயாரும் இல்லை 

அமையும் = அடங்கும்

அமையுறு = அமைதி தவழ்கின்ற

 தோளியர்மேல் = தோளை உடைய பெண்கள் மேல்

வைத்த ஆசையுமே. = வைத்த ஆசையுமே

குறிப்பு: இந்த பாடலுக்கு பொருள் எழுதிய பெரியவர்கள், அபிராமி பட்டர் இந்து சமயமே (அபிராமியை தொழும்) சிறந்தது. மற்ற சமயங்களை பற்றி எண்ணக் கூட வேண்டாம் என்று சொல்வதாக பொருள் கூறுகிறார்கள். எது உங்களுக்கு சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். 

2 comments:

  1. Your introduction is better than even the poem itself!

    ReplyDelete
    Replies
    1. அபசாரம் அபசாரம்....அபிராமி அந்தாதி போன்ற உயர்ந்த இலக்கியத்திற்கு உறை போட காணுமா என் உரை...

      Delete