Sunday, October 21, 2012

அபிராமி அந்தாதி - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதாவள்


அபிராமி அந்தாதி - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதாவள்

அவள் எப்படி இருப்பாள் ? கறுப்பா ? சிவப்பா ? உயராமா ? குள்ளமா ?

அவளை எப்படி சொல்லப் போனாலும் சரியாக வர மாட்டேன் என்கிறது. அவள் வார்த்தைகளுக்குள் வரதாவள். அவளின் பேரழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

சரி வார்தையையை விட்டு விட்டு வார்த்தை இல்லாமல் நினைத்துப் பாப்போம் என்றால் அந்த நினைவையும் தாண்டி அவள் நிற்கிறாள். அவளை எப்படி தான் நினைப்பது ?

அப்படி கூட சொல்ல முடியாது. அவளைப் பற்றி உங்களுக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதே தவிர எனக்கு அவளைத் தெரியும். அவளை நான் பார்த்து இருக்கிறேன். என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். உங்களுக்குச் சொன்னால் புரியாது. உங்கள் கற்பனைக்கு அவள் எட்ட மாட்டாள். 

அவளின் கணவன் காமத்தை கடந்தவன். காமனை எரித்தவன். அப்பேர்பட்டவனை, காமம் கடந்த அவன் விரதத்தை இந்த உலகமே பழிக்கும் படி அவனின் ஒரு பாகத்தை எடுத்துகொண்டு ஆள்பவள் நீ.. அவ்வளவு அன்யோன்யம்.
 
பாடல்


மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன் 
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை 
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம் 
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

பொருள் 

மொழிக்கும் = வார்த்தைகளுக்கும்

நினைவுக்கும் = மனதிற்கும்

எட்டாத = அடைய முடியாத

நின் திருமூர்த்தம், = உன் திவ்ய வடிவம்

என்தன் = என்னுடைய 

விழிக்கும் = பார்வைக்கும்

வினைக்கும் = செயலுக்கும்

வெளிநின்றதால், = தெரியும்படி இருந்தது

விழியால் = நெற்றிக் கண்ணால்

மதனை = மண் மதனை

அழிக்கும் தலைவர்,= அழிக்கும் தலைவரான சிவனின்

அழியா விரதத்தை = என்றும்  அழியா  விரதத்தை   

அண்டம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

பழிக்கும்படி,= பழிக்கும்  படி (அவருடைய விரதத்தை பழிக்கும் படி. 

அவளிடம்  அவரின் விரதம் எல்லாம் பலிக்காது)

ஒரு பாகம் கொண்டு = ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டு

ஆளும் பராபரையே. = ஆள்பவளே

2 comments:

  1. என்ன ஒரு பாடல், என்ன ஒரு பாவம், பரவசம், என்ன ஒரு பக்தி இருந்தால் இப்படி எல்லாம் உருகி உருகி பாட முடியும்! நிஜமாவே பார்த்திருப்பாரோ?
    அதையும் இவ்வளவு அழகா விவரித்து கொடுத்ததற்கு எப்படி நன்றி சொல்றது? அந்த காலத்து ராசாவா இருந்தா பாடலை எழுதிய பட்டருக்கு பாதியும் அதற்கு விளக்கம் கொடுத்த உனக்கு பாதி ராஜ்யமும் கொடுத்து விடுவேன்.

    ReplyDelete
  2. "அண்டம் எல்லாம் பழிக்கும்படி" என்பது எனக்கு இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. சிவனின் விரதத்தை உலகம் எல்லாம் பழிக்கின்றது - ஏனென்றால், உலகம் இயல்வதற்குக் காமம் தேவை.

    ஆனால், உலகம் பழிப்பதற்கும், அபிராமி ஒரு பாகம் கொண்டதற்கும் என்ன தொடர்பு?

    ReplyDelete