Monday, October 15, 2012

அக நானூறு - அவள் வருவாளா ?


அக நானூறு - அவள் வருவாளா ?


அவன்: அவ வருவாளாடா ? 

தோழன் : நிச்சயம் வருவா. 

அவன்: எப்படிடா சொல்ற ? ஒரு வேளை வரட்டா ? என் கிட்ட என்ன இருக்கு ? நான் அவளை சந்தோஷமா வச்சுக்க முடியுமா ? என் கூட வந்தா அவ கஷ்டத்தான் படப் போறா. எனக்கு என்னவோ அவ வர மாட்டான்னு தான் தோணுது. 

தோழன்: டேய், உன்கிட்ட பணம் காசு இல்லாம இருக்கலாம்...ஆனா அவளுக்கு கொடுக்க நீ எவ்வளவு அன்பு வச்சிருக்க...உன்னை விட அவளை யாரும் இந்த உலகத்தில அதிகமா நேசிக்க முடியாது...


அது ஒரு வறண்ட கிராமம். தண்ணியே இல்லை. ஊருக்கு வெளியே ஒரு ஆறு இருக்கிறது. அதில் எப்ப தண்ணி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த ஆற்றுப் படுகையை தோண்டினால் கொஞ்சம் போல ஊத்துத் தண்ணி வரும். தாகம் கொண்டு ஒரு ஆண் யானையும் பெண் யானையும் அந்த பக்கமா வருகின்றன. இருக்கும் நீரோ கொஞ்சம். வெயில் சுட்டு எரிக்கிறது. 

அந்த ஆண் யானை அந்த தண்ணீரை எடுத்து பெண் யானையின் மேல் தெளித்து அதன் சூட்டை தணிக்கிறது. மீதம் இருக்கும் கலங்கிய சேற்று நீரை தன் மேல் வாரி இறைத்துக் கொள்கிறது.  பின் இரண்டும் நடந்து செல்கின்றன. ஒதுங்க நிழல் இல்லை. மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்டன. அந்த மரத்தின் மொட்டை கிளைகள் தரும் நிழலில் அந்த ஆண் யானை ஒதுங்குகின்றது. 

இன்னும் கொஞ்ச தூரம் போனால், அங்கே சில கிராம வாசிகள் நடந்து போய் கொண்டு இருக்கிறார்கள். பனை ஓலையில் செய்த குடையையை அவர்கள் வைத்து இருக்கிறார்கள். காற்று வேகமாக அடிக்கிறது.  அந்த காற்று, குடையில் மோதி ஒரு வித சத்தத்தை எழுப்புகிறது. அந்த சத்தம் தன்னுடைய பெண் மானின் சத்தம் என்று நினைத்து அதை தேடி ஆண் மான் காட்டுக்குள் ஓடுகிறது. 

எங்கு பார்த்தாலும் வறட்சியின் கோர தாண்டவம். கடினமான வாழ்க்கை. இருந்தாலும் காதல் அங்கே இழை ஓடிக்கொண்டிருக்கிறது. 

பாடல்

நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் 
வேனில் நீடிய வானுயர் வழிநாள்
வறுமை கூரிய மண்ணீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொரிபுறம் உரிஞிய நெறியயல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ நம்மொடு
தான்வரும் என்ப தடமென் தோளி
உறுகண் மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கனைவிசைக் கடுவளி யெடுத்தலின் துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்
கருமுக முசுவின் கானத் தானே.


நாம் நகை யுடையம் - நாம் மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தோம்

கடுதெறல் = மிகுந்த வரட்சியான

வேனில் = கோடைக் காலம்

நீடிய வான் உயர் வழி - இந்த சாலையோ ஒரு முடிவு இல்லாமல் ஏதோ 
வானத்திர்க்கே போவது மாதிரி போய் கொண்டே இருக்கிறது

நாள் வறுமை கூரிய - ஒவ்வொரு நாளும் வறுமை மிக (இங்கே தண்ணீர் 
என்ற செல்வம் குறைந்து கொண்டே போக என்று அர்த்தம்), 

மண்நீர்ச் = மண் நிறைந்த நீர் உள்ள 

சிறுகுளத் = சிறிய குளத்தில் (சேறு நிறைந்த ஒரு குட்டை)

தொடுகுழி = பள்ளம் பறித்து வைத்த ஒரு சின்ன குழியில்

மருங்கில் -  உள்ளே  

துவ்வாக் கலங்கல் - அருந்த முடியாத கலங்கிய நீரால்

கன்று உடை = கன்றை உடைய

மடப்பிடிக் = பெண் யானை

கயந்தலை மண்ணி -  அதன் தலையில் நீரை ஊற்றி (கழுவி) , 

சேறுகொண்டு ஆடிய = மீதியுள்ள சேற்றை மேலே பூசிக் கொண்டு ஆடிக் கொண்டு

வேறுபடு = நிறம் வேறு பட்ட

வயக் களிறு - வலிமையான ஆண் யானை 
 
செங் கோல் = சிவந்த காம்பினை உடைய

வால்இணர் = மலர் கொத்துகளை

தயங்கத் தீண்டி - தயக்கத்துடன் தும்பிக்கையால் பற்றி 

சொரிபுறம் = தன் முதுகை

உரிஞிய -  உறாய்துக்   கொண்டு 

நெறி = வழியில்

அயல்= பக்கத்தில் உள்ள (ரோட்டோரம்_

மராஅத்து -  வெண்மையான கடம்ப மரத்தின் 
 
அல்குறு = சுருங்கிய

வரி நிழல் = வரி வரியாக விழும் நிழல் (இலை இல்லாத மரத்தின் நிழல்)

அசைஇ - அசைந்து இருந்து  

நம்மொடு = நம்முடன்

தடமென் = அழகிய மென்மையான

தோளி வரும் என்ப  - தோளினை உடைய அவள் வருவாள் என்று இருப்போம்

நம்முடன் பெரிய மென்மை வாய்ந்த தோளை யுடைய தலைவி வரும் என்பர், 

உறுகண் = செல்கின்ற வழி

மழவர் = மழவர்களின் 

உருள் கீண்டிட்ட- வழித்தடம் உண்டாக்கிட, 

ஆறுசெல் மாக்கள் -  வழியே செல்லும்  மக்கள்  

சோறு பொதி = சோற்று மூட்டை போல பெரிதாக உள்ள  

வெண்குடை -  வெண்மையான பனை ஓலை குடை  

கனைவிசை = மிகுந்த விசையுடன்

கடுவளி = வேகமாக வீசும் காற்று

எடுத்தலின் - தூக்கும்   போது

துணை செத்து - தனது பிணையின் குரல் என்று எண்ணி  

வெருள் ஏறு -  அஞ்சிய மான் 

பயிரும் ஆங்கண் -  அந்த துணை இருக்கும் இடங்களை  


கருமுக = கரிய முகத்தை உள்ள

முசுவின் = முசுக்கள் உள்ள 

கானத்தான் -  காட்டில் 


.


1 comment:

  1. இந்தப் பாடலுக்குத் தலைப்பும், முகவுரையும் அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை (என் கருத்தில்). இந்தப் பாடலுக்கு, வறண்ட கோடையிலும் காதல் என்பதே பொருந்தி வருகிறது.

    ReplyDelete