Monday, October 8, 2012

கம்பராமாயணம் - மழைகண்


கம்பராமாயணம் - மழைகண்


பெயர் சொற்கள் இரண்டு வகைப்படும். இடுகுறிப் பெயர், காரணப் பெயர்.

காரணப் பெயர் என்பது ஒரு காரணத்தால் வரும் பெயர். நாற்காலி என்பது காரணப் பெயர். நான்கு கால்கள் இருப்பதால் அது நாற்காலி.
அலைகடல், தோய்தயிர், என்பது எல்லாம் காரணப் பெயர்கள். 

ஒரு காரணமும் இல்லாமல், ஒரு பொருளுக்கு பெயர் இட்டு வழங்கினால், அதற்க்கு இடுகுறிப் பெயர். மரம், செடி என்பன உதாரணம். 

மழை கண் என்பது பொதுவாக ஒரு இடுகுறிப் பெயர்.

எப்போதும் மழை போல் பொழிந்து கொண்டு இருக்கும் கண் யாருக்கும் இருக்காது.

ஒரு உதாரணத்திற்கு சொல்வார்கள் மழை கண் என்று.

அழகுக்காக சொல்வதும் உண்டு.

எப்போதாவது சில பல நீர் துளிகள் வரலாம். அதனால் மழைக் கண் என்பதை காரணப் பெயராக கொள்ள முடியாது. 

ஆனால், ஒரே ஒரு ஆளுக்கு, மழை கண் என்பது காரணப் பெயராக இருந்ததாக கம்பன் சொல்கிறான்.

சீதை அசோக வனத்தில் இருக்கிறாள். கண்கள் நீர் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. நிற்காமல் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஏதோ அணைக் கட்டில் பெரிய ஓட்டை விழுந்தால் எப்படி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டே இருக்குமோ, அது போல் அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 

பாடல்


தழைத்தபொன் முலைத் தடம் கடந்து, அருவி போய்த் தாழப்
புழைத்த போல,நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும்நுண்ணிய மருங்குலாள், இணை நெடுங் கண்கள்,
'மழைக்கண்'என்பது காரணக் குறி என வகுத்தாள்.

பொருள்:

தழைத்தபொன் முலைத் = சீரிய அழகிய போன்ற மார்புகளின் மேல்

தடம் = அந்த தடையையை . கண்ணீர் அருவி போல் விழுகிறது. விழும் 
கண்ணீர், அந்த மார்பகங்களால் தடை படுகிறது.

கடந்து, = தாண்டி

அருவி போய்த் தாழப் = கீழே விழும் அருவி போல்

புழைத்த போல,= புழை என்றால் துளை. கண்ணில் யாரோ துளை இட்டால் எப்படி கண்ணீர் விடாமல் கொட்டிக் கொண்டே இருக்குமோ, அது போல்

நீர் = கண்ணீர்

நிரந்தரம் = நிரந்தரமாக, எப்போதும்

பொழிகின்ற பொலிவால், = பொழிகின்ற அழகால் (அதில் கூட ஒரு பொலிவு)

இழைக்கும் = நூல் இழை போன்ற. இழைக்கும் என்பதற்கு மூச்சு வாங்கும் 
என்றும் பொருள் சொல்லலாம். "ஏன் இப்படி இழைக்க இழைக்க ஓடி வருகிறாய்..கொஞ்சம் நிதானமாய் வரக் கூடாது ? ". தனங்களின் பாரத்தால் இழைக்கும் இடை.

நுண்ணிய மருங்குலாள்,= சிறிய இடையியை கொண்ட சீதை

இணை நெடுங் கண்கள்,= இணைந்த இரண்டு நெடிய கண்கள்

'மழைக்கண்' = மழைகண்

என்பது = என்று கூறுவது

காரணக் குறி என வகுத்தாள்.= காரணப் பெயர் என்று ஆக்கினாள்

2 comments:

  1. அருமையான விளக்கம். தமிழ் வகுப்பில் இதை எல்லாம் இவ்வளவு உணர்ந்து படித்ததில்லை. உணர்ந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்களா என்றும் தெரிய வில்லை. தமிழை ரசிக்க வைப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அருமையான பாடலுக்கு, அருமையான பொருள் விளக்கம். நன்றி.

    ReplyDelete