Friday, November 30, 2012

இராமாயணம் - மனக்கூனி


இராமாயணம் - மனக்கூனி 


கூன் உடலில் இருந்தால் பரவாயில்லை. அது இயற்கையாக அமைந்தது. நாமாக வரவழைத்துக் கொண்டது அல்ல, தானாக வந்தது.

இவளோ, மனத்தில் கூன் விழுந்தவள். மன விகாரம் நாமே வரவழைத்துக் கொள்வது. 

இராமன் மணி முடி சூடப் போகிறான் என்று அறிந்தவுடன் அயோத்தி மாநகரமே அலங்காரம் கொண்டது, வானவர் வாழும் இந்திர உலகம் போல ஜொலிக்கும் வேளையில், மற்றவர்களுக்கு துன்பம் செய்யும் இராவணனின் தீமையே உரு பெற்று வந்தது போல வந்தால் மனதில் கூன் உள்ள கூனி....

அவளை மனக் கூனி என்றான் கம்பன். மனதில் கூன் விழுந்தவள்.

பாடல்: 


அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள். 


பொருள் 

அந் நகர் = அந்த அயோத்தி மாநகர்

அணிவுறும் = அலங்கரிகப் பட்டு

அமலை = சந்தோஷத்தில், ஆர்வத்தில்

வானவர் = தேவர்கள் (வாழும்)

பொன்னகர் இயல்பு எனப் பொலியும் = பொன்னாலான அமராவதி பட்டணம் போல் பொலியும்

ஏல்வையில், = நேரத்தில், பொழுதில், வேளையில்

இன்னல் செய் = துன்பம் செய்கின்ற

இராவணன் = இராவணன்

இழைத்த தீமைபோல்  = செய்த தீமை போல்

துன்ன அருங் = நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு (உன்னுதல் = நினைத்துப் பார்த்தல். "உன்னலே தியானம்" என்பது கந்த புராணம்)

கொடு  = கொடிய 

மனக் கூனி தோன்றினாள். = மனத்தில் கூன் உள்ள அவள் தோன்றினாள்

கொடு மனக் கூனி தோன்றினாள் என்பதை கொடிய மனம் கொண்ட கூனி என்றும் கொள்ளலாம், அல்லது கொடிய, மனத்தில் கூன் உள்ளவள் தோன்றினாள் என்றும் பொருள் கொள்ளலாம்

1 comment:

  1. can there be any other poet compared to kambar other than in tamil!!

    ReplyDelete