Wednesday, November 7, 2012

திருக்குறள் - வினையும் பயனும்


திருக்குறள் - வினையும் பயனும்


நல் வினை , தீ வினை என்று செயல்களை இரண்டாகப் பிரித்து வைத்து இருக்கிறோம். நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும். தீயது செய்தால் தீமை பிறக்கும் என்பது நம்பிக்கை.  செயல்களின் பலன்கள் இந்தப் பிறவியில் கிடைக்காவிட்டால் அடுத்து வரும் பிறவிகளில் கிடைக்கும் என்பது இன்னொரு நம்பிக்கை. 

நல்ல வினை செய்தால், அதன் பலன்களை அனுபவிக்க இன்னொரு பிறவி அடைய வேண்டி வரும். அந்தப் பிறவியில் நல்லதோ கெட்டதோ செய்ய நேரிடும். பின் அதன் பலனாக மீண்டும் ஒரு பிறவி என்று இது ஒரு முடிவில்லாமல் போய் கொண்டே அல்லவா இருக்கும். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?

பற்றித் தொடரும் இரு வினைகளை எப்படி நிறுத்துவது ? இதில் இருந்து எப்படி வெளி வருவது ?

இறை அருளால் இந்த வினை பயன்கள் நம்மை சேராது என்கிறார் வள்ளுவர். 

பாடல்


இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு               

சீர் பிரித்த பின் 

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

பொருள்:

இருள் சேர் = வாழ்வில் இருளை சேர்க்கும், துன்பத்தை தரும்

இரு வினையும் =  இரண்டு வினைகளும்

சேரா = நம்மை சேராது, எப்போது என்றால்

இறைவன் = இறைவனின்

பொருள் சேர் = பொருள் சேர்ந்த 

புகழ் புரிந்தார் மாட்டு = புகழை புரிந்து கொண்டவர்களுக்கு 

கெட்ட வினை இருள் இருள் சேர்க்கும். சரி. 

நல்ல வினை எப்படி இருள் சேர்க்கும் ? 

கெட்டது செய்யக் கூடாது என்றால் சரி. நல்லது செய்யக் கூடாது என்றால் பின் என்ன தான் செய்வது வாழ்க்கையில் ? வள்ளுவர் செயலற்று இருக்கச் சொல்கிறாரா ?

இதற்க்கு பெரியவர்கள் பல விதங்களில் அர்த்தம் தருகிறார்கள்.

" சிவ புராணம் தன்னை  முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் " என்கிறார் மணி வாசகப் பெருந்தகை. தன்னை தொடர்ந்து வரும் முற் பிறவி வினைகளை ஓய்ந்து போகும்படி சிவ நாமத்தை உரைப்பேன் என்கிறார். 

"வினை ஓட விடும் வடி வேல் " என்பார் அருணகிரி நாதர். தொடர்ந்து வரும் வினையையை திரும்பி ஓட விடுமாம் முருகன் கை வேல்.

இப்படி முன் செய்த வினைகளில் இருந்து நம்மை காப்பது இறைவன் திருவருள் என்பது ஒரு அர்த்தம். 

இன்னொரு அர்த்தம் 

வினை , விளைவு என்று எடுத்துக் கொண்டால் 

நல்ல வினை - நல்ல விளைவு
நல்ல வினை - கெட்ட விளைவு
கெட்ட வினை - நல்ல விளைவு
கெட்ட வினை - கெட்ட விளைவு 

இங்கு நல்லது கெட்டது என்பதற்கு சற்று வேறு விதமாக அர்த்தம் சொல்லலாம்.

நல்ல வினை என்றால் முதலில் செய்யும் போது சுகமாக இருக்கும். அது பின்னாளில் நல்லதையும் தரலாம் அல்லது கெடுதலையும் தரலாம்.
கெட்ட வினை என்றால் முதலில் செய்யும் போது கடினமாக இருக்கும், துக்கமாக இருக்கும். ஆனால் பின்னாளில் அது நல்லதை தரலாம், அல்லது கெடுதலையும் தரலாம்.

ஒரு உதாரணம் பார்ப்போம்:

மது அருந்துவது, புகை பிடிப்பது - முதலில் சுகமாக இருக்கும். பின்னாளில் துன்பம் தரும்.

நல்ல புத்தங்களை வாசிப்பது, நல்லவர்களோடு பழகுவது - முதலிலும் சுகம், பின்னாளிலும் சுகம்

உடற் பயிற்சி செய்வது - முதலில் கடினம், பின்னாளில் சுகம்

கெட்டவர்கள் சகவாசம், திருடுதல், கொலை, கொள்ளை  போன்ற காரியங்கள் - முதலிலும் துன்பம், பின்னாளிலும் துன்பம் 

பின்னாளில் துன்பம் தரும் இரு வினைகள் நம்மை எப்போது சேராது என்றால், நாம் இறை சிந்தனையோடு இருக்கும் போது. 

சற்றே சிக்கலான பாடல் தான். 

யோசித்துப் பாருங்கள். இன்னும் கூட வேறு ஏதாவது அர்த்தம் தோன்றலாம்.



2 comments:

  1. rendu varihalukkul ivvalavu arthamaa? ammaadiyoo!

    ReplyDelete
  2. இரு வினையுமே கஷ்டம்தான். நல்லது, கேட்டது இரண்டில் இருந்தும் விடுபடுவதே நன்று என்பது நேரடிப் பொருள்.

    ReplyDelete