Thursday, November 29, 2012

பிரபந்தம் - பல்லாண்டு கூற வாருங்கள்


பிரபந்தம் - பல்லாண்டு கூற வாருங்கள்


தான் மட்டும் இறைவனை வாழ்த்தினால் போதாது, எல்லோரும் வாழ்த்த வேண்டும், அந்த மகிழ்ச்சியையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். எவ்வளவு கருணை. 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று 

என்பார் திருவள்ளுவர். அமிழ்தமே ஆயினும், விருந்தினர் காத்திருக்க தான் மட்டும் உண்ண மாட்டார்கள் உத்தமர்கள். 

இறைவனை வாழ்த்துவதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். 

நீங்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டுமா, வாருங்கள், வந்து எங்கள் குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்தவர்களுக்கு எல்லாம் மண்ணும் மணமும் தருகிறார். (அது என்ன மண்ணும் மணமும் ? பின்னால் பார்ப்போம்). 

சில பேர் வாழ்க்கை என்பதே உண்பதும் உறங்குவதும் என்று இருப்பார்கள். அவர்களுக்கு இறைவன் மேல் பக்தி கிடையாது. உடல் வளர்பதே முழு முதல் வேலையாக இருப்பார்கள். அவர்களை, நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து கவனியுங்கள். இந்த கூட்டத்தில் நீங்கள் சேர வேண்டாம் என்கிறார். 

இந்த ஜன்மம் மட்டும் அல்ல, முன்னால் உள்ள ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் எந்த பழியும் செய்யாதவர்கள்.

வாருங்கள், நாம் எல்லோரும் சென்று அரக்கர்கள் வாழும் இலங்கயையை பாழாக்க போர் புரிந்தவனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் என்று அழைக்கிறார். 

பாடல் 

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே

பொருள் 

வாழாட் பட்டு = வாழ்வதற்கு ஆட்பட்டு, அதாவது வாழ்வாங்கு வாழ, பெரு வாழ்வு வாழ

நின் றீருள்ளீ ரேல் = நிற்பவர்களே

வந்து = இங்கு வந்து 

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் கொள்ளுங்கள். மண்ணும் மணமும் என்பதற்கு பல அர்த்தங்கள் கூறுகிறார்கள். மண் என்றால் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண். மணம் என்றால் திருத்துழாய். துளசி. திருமண்ணையும், துளசியும் பெற்றுக் கொள்ளுங்கள்
 
கூழாட் பட்டு = கூழுக்கு ஆசைப்பட்டு

நின் றீர்களை = இருப்பவர்களை 

எங்கள் குழுவினில் = எங்கள் கூட்டத்தில்

புகுதலொட்டோம் = சேர்க்க மாட்டோம்

ஏழாட் காலும் = முந்தைய ஏழு பிறவியிலும்

பழிப்பிலோம் = எந்த பழியும் இல்லாதவர்கள் 

நாங்கள் = நாங்கள்

இராக்கதர் = அரக்கர்கள்

வாழ்இலங்கை = வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழாக

படைபொரு தானுக்குப் = படை எடுத்து சென்றவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோமே 

அவன் கையிலே சங்கு, சக்கரம் இருக்கிறது. மல்லர்களை வென்ற திண் தோள் தான். நம்மை காப்பாற்ற வந்து அவன் எவ்வளவு ஆபத்தில் மாட்டிக் கொள்கிறான். கம்சன், இராவணன், இரணியன் என்று பல பல அரக்கர்கள். அவர்களோடு சண்டை இடும் போது அவனுக்கு ஏதும் ஆபத்து வந்து விடக் கூடாதே என்று ஆழ்வார் கவலைப் படுகிறார். 

பல சாலியான பிள்ளையை பெற்ற தாய் கவலை படுவாள்...எங்க யார் கிட்டயாவது சண்டை போட்டு அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று கவலைப் படுவாள். 

நாம் இறைவனிடம் நம்மை காப்பாற்ற சொல்லி வேண்டுகிறோம்...ஆழ்வாரோ, தன்னைப் பற்றி கவலைப் படவில்லை...அவனுக்கு ஒண்ணும் நேர்ந்து விடக் கூடாதே என்று ஒரு தாயையை போல கவலைப் பட்டு...நீ தீர்காயுசா பல்லாண்டு வாழ வேண்டும் என்று தான் வாழ்த்தியது மட்டும் போதாது என்று எல்லோரையும் வாழ்த்த அழைக்கிறார். 
 
மற்ற மதங்களில் வயதில் சிறியவர்கள், வயதில் தன்னை விட மூத்தவர்களை வாழ்த்த மாட்டார்கள். 

வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் வாழ்த்த வயது ஒரு தடை கிடையாது. 

அந்த சம்ப்ரதாயம் இந்த பல்லாண்டு பாடலில் இருந்து தொடங்கியிருக்குமோ ? 

வாருங்கள், அவனை வாழ்த்துவோம்...

1 comment: