Wednesday, December 12, 2012

இராமாயணம் - உபசரிக்கும் பண்பாடு


இராமாயணம் - உபசரிக்கும் பண்பாடு


நாம சில பேரோட வீட்டுக்குப் போனால் சாப்பாடு போட்டே கொன்று விடுவார்கள். இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க என்று அளவுக்கு அதிகமாக நம்மை உண்ண வைத்து ஒரு வழி பண்ணி விடுவார்கள்."எனக்கு சர்க்கரை வியாதி ... இனிப்பு ஆகாது" என்று சொன்னாலும் கேட்பது இல்லை. "ஒரு நாள் சாப்பிட்டால் ஒண்ணும் பண்ணாது...வேணும்னா ஒரு மாத்திரை அதிகமா போட்டுகோங்க " என்று உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததையும் உண்ண வைத்து விடுவார்கள். உண்ட பின் சிரமப் படுவது நாம் தான். 

குகன் மூலம் கம்பன் உபசரிக்கும் பண்பாடை காட்டுகிறான்....


இருத்தி ஈண்டு’ என்னலோடும்
     இருந்திலன்; எல்லை நீத்த
அருந்தியன், ‘தேனும் மீனும்
     அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
     திருஉளம்?’ என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,
     விளம்பலுற்றான்;

குகன் மீனையையும் தேனையும் இராமனுக்காக கொண்டு வந்து இருக்கிறான். இராமனை சுற்றி முனிவர்கள் இருக்கிறார்கள். இராமன் மீன் உண்பானா மாட்டானா என்று குகனுக்குத் தெரியாது. 

இராமா, சாப்பிடு என்று கூறினால், ஒன்று இராமன் உண்ண வேண்டும் அல்லது வேண்டாம் என்று மறுக்க வேண்டும். ஒரு வேளை இராமன் மீன் உண்ணாதவனாய் இருந்தால், சாப்பிடுவது இராமனுக்கு சங்கடம். சாப்பிடா விட்டால் குகனுக்கு சங்கடம். இராமனை சுற்றி முனிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது கட்டாயம் பிடிக்காது. 

குகன் மூலமாக கம்பன் நமக்கு ஒரு பண்பாட்டு பாடம் நடத்துகிறான். 

தேனும் மீனும்
     அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
     திருஉளம்?’

குகன் கேட்க்கிறான் இராமனிடம், "இராமா தேனும் மீனும் கொண்டு வந்திருக்கிறேன்...நீ என்ன நினைக்கிறாய்" 

சாப்பிடுகிறாயா என்று கூட கேட்கவில்லை...என்ன நினைக்கிறாய் என்று பணிவுடன் வினவுகிறான். 

அடுத்த முறை யாராவது விருந்தினர் வந்தால், எதை எவ்வளவு சாப்பிடுவது என்று அவர்களே முடிவு செய்யட்டும் என்று விட்டு விடுங்கள். அன்பை காட்டுகிறேன் என்று அன்னத்தை அவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்பது கம்பன் காட்டும் பண்பாடு 

2 comments:

  1. being a host is not an easy job. some guest will feel free and self service whatever they want and may even serve us. but some guests may be too shy, we have to force feed them.what to do then?

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் மனம் அறிந்து பரிமாற வேண்டும். பின்னர் ஒரு பாடலில் இராமனின் மனம் அறிந்த பின் குகன் எப்படி உணவை மாற்றுகிறான் என்று பார்ப்போம். கம்பன் காப்பியத்தை மிக மிக நுணுக்கமாக எழுதி இருக்கிறான். ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி பார்த்தால் காப்பிய சுவை கூடும். (காப்பி சுவை அல்ல)

      Delete