Monday, December 17, 2012

தேவாரம் - தென்றல் அடி வருட


தேவாரம் - தென்றல் அடி வருட


நாள் எல்லாம் அலைந்து, களைத்துப் போய் வீடு வருகிறீர்கள். கால் எல்லாம் அப்படி வலிக்கிறது. அப்பாட என்று நாற்காலியில் கால் நீட்டி உட்காருகிறீர்கள். அப்போது, உங்கள் மனம் கவர்ந்தவரோ/ளோ வந்து, air conditioner ஐ ஆன் பண்ணி, உங்களுக்கு பிடித்த இசையை காற்றில் இழைய விட்டு, சுட சுட ஒரு காப்பியும் கொண்டு வந்து தந்து, உங்கள் அருகில் அமர்ந்து உங்கள் காலை மெல்ல அமுக்கி விட்டால் எப்படி இருக்கும் உங்களுக்கு...

திருவையாறு என்ற ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன, மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது...அந்த தென்றல் காற்றில் கரும்பு வயலில் கரும்புகள் லேசாக அங்கும் இங்கும் ஆடுவதைப் பார்க்கும் போது ஏதோ இந்த காற்றில் அவை சொக்கிப் போய் கண் மூடி தலை ஆட்டுவதைப் போல இருக்கிறது....

திருஞான சம்பந்தரின் பாடல் 


நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

சீர் பிரித்த பின் 

நின்று உலாவும் நெடு விசும்பு நெருக்கி வரும் புரம் மூன்றும் நீள் வாய் அம்பு
சென்று உலாவும் படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோவில்
குன்று எல்லாம் குயில் கூவக் கொழும்பி ரசம் மலர் பாய்ந்து வாசம் மல்கும்
தென்றலார் அடி வருடி செழுங் கரும்பு கண் வளரும் திருவையாறே 

பொருள் 

நின்று உலாவும் நெடு விசும்பு = விசும்பு என்றால் மலை. நெடு விசும்பு என்றால் நெடிய, உயர்ந்த மலை. உலாவுதல் என்றால் நடத்தல், நகருதல், என்று பொருள். மலை எப்படி உலாவும் ? முன்னொரு காலத்தில் மூன்று அரக்கர்கள் மூன்று பெரிய உலகங்களை செய்து காற்றில் பறந்து பறந்து மற்றவர்கள் மேல் மோதி தாங்கொண்ணா துயர் தந்து வந்தார்கள். அது நின்று (ஓரிடத்தில் நின்று), உலாவும் நெடு விசும்பு. 

நெருக்கி வரும் = அப்படி மலை போன்ற அந்த பெரிய உலகங்கள் நெருக்கி வரும் போது

புரம் மூன்றும் = அந்த மூன்று உலகங்களையும்

நீள் வாய் அம்பு = நீண்ட கூர்மையான அம்பு

சென்று உலாவும் படி = சென்று தைக்கும் படி

தொட்ட = (அம்பை) விட்ட

சிலையாளி = சிலை என்றால் வில். வில்லை கொண்ட

மலையாளி = கைலாய மலையில் வாழும் (சிவன்)

சேரும் கோவில் = சேரும் கோவில்

குன்று எல்லாம் = குன்றுகள் தோறும்

 குயில் கூவக் = குயில்கள் கூவ

கொழும்பி = செழுமையான

ரசம் = தேன்

மலர் பாய்ந்து = மலர்களில் இருந்து பாய்ந்து

வாசம் மல்கும் = வாசம் வீசும்

தென்றலார் = தென்றல் (தென்றலை ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ உவமை ஆக்கி, தென்றலார் என்கிறார்)

அடி வருடி = பாதம் வருடி 

செழுங் கரும்பு = செம்மையான கரும்பு

கண் வளரும் = உறக்கம் கொள்ளும்

திருவையாறே = திருவையாறே 

மீண்டும் ஒரு முறை பாட்டைப் படித்துப் பாருங்கள்...தென்றல் உங்கள் தலை கலைத்துப் போவதை உணர்வீர்கள்...


3 comments:

  1. என்னம்மா அனுபவித்து பாடி இருக்கிறார். அதற்க்கு விளக்கமும் முன்னுரையும் superb.

    ReplyDelete
  2. என்ன அற்புதமான கற்பனை! என்ன அழகான முன்னுரை உனது! என் முகத்தில் ஆனந்தப் புன்முறுவலை வரவழைத்தன இரண்டும் சேர்ந்து!

    ReplyDelete
  3. மிக்க அற்புதமான வருடம் பதிவு

    ReplyDelete