Wednesday, December 26, 2012

இராமாயணம் - யாரோ , இவர் யாரோ ?


இராமாயணம் - யாரோ , இவர் யாரோ ?


சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். அவன் அழகில் மயங்குகிறாள். ஜொள்ளு ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. 

யார் இவன் ? இவ்வளவு அழகாக இருக்கிறானே, இவன் மன்மதனோ ? இருக்காது, ஏனென்றால் மன்மதனுக்கு உருவம் கிடையட்து. இவனுக்கு உருவம் இருக்கிறதே. 

ஒரு வேளை இந்திரனை இருக்குமோ ? இல்லையே, இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் என்று சொல்வார்களே...இவனூக்கு அப்படி இல்லையே....

இல்லைனா அந்த சிவனை இருக்குமோ ? ம்ம்ஹும்....சிவனுக்கு மூணு கண்ணு இருக்குமே...இவனுக்கு இரண்டு தானே இருக்கு...

பிரம்மனை உந்தியில் உண்டாக்கிய திருமாலாய் இருக்குமோ...இல்லையே அவனுக்கு நான்கு கைகள் உண்டே...இவனுக்கு இரண்டு கைகள் தானே இருக்கு...

யாராய் இருக்கும் ?

பாடல் 


சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க் கண் ஓர் மூன்று; நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு' என்று உன்னுவாள்

பொருள் 

சிந்தையின் உறைபவற்கு = சிந்தையில் உறைபவருக்கு, அதாவது மன்மதனுக்கு. அது ஏன் அவனுக்கு மட்டும் சிந்தையில் உறைபவன் ? மற்ற கடவுள்களை நாம் சில நாட்களில், சில நேரங்களில் நினைக்கிறோம். பூஜை நேரத்தில், குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட நாட்களில் நினைக்கிறோம். மன்மதன் மட்டும் எப்பவுமே நம் சிந்தனையில் இருக்கிறான். நாள், கிழமை எல்லாம் கிடையாது. ஜொள்ளு விட நேரம் காலம் என்ன ....கோவிலில், இறைவன் சந்நிதியில் நிற்கும் போது கூட, "அந்த சிகப்பு சேலை நல்லா இருக்கே...எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே " என்று சிந்தை எங்கோ போகிறது ....

உருவம் தீர்ந்ததால் = உருவம் இல்லாததால் (மன்மதன்னுக்கு உருவம் கிடையாது) சிவன் காமத்தை எரித்தவன், சிவகாமி உடலில் பாதியை எடுத்துக் கொண்டாலும்

இந்திரற்கு ஆயிரம் நயனம் = இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்

ஈசற்கு முந்திய மலர்க் கண் ஓர் மூன்று = சிவனுக்கு மூன்று கண்கள் ;

கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு என்பது பட்டினத்தடிகள் வாக்கு 

நான்கு தோள், உந்தியில் உலகு அளித்தாற்கு' = நாபிக் கமலத்தில் உலகை உண்டாக்கியவர்க்கு (திருமாலுக்கு) நான்கு கைகள்

என்று உன்னுவாள் = என்று ஜொள்ளு விடுவாள் 

ஜொள்ளு தொடரும் 

2 comments:

  1. this language is what makes your blog so interesting. no one can make it more interesting. keep it up.

    ReplyDelete
  2. வேறு யாருக்கும் இல்லாத பெயர், "சிந்தையில் உறைபவன்", மன்மதனுக்கு மட்டும்! எல்லோர் மனதிலும் ஜோள்ளே!

    ReplyDelete