Monday, December 3, 2012

அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே


அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே 


 எவ்வளவோ நல்லது கேட்டது எல்லாம் எடுத்துச் சொன்னாலும், தாம் தவறு செய்யாமல் இருப்பதில்லை. அப்பப்ப ஏதாவது தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம்...

தெரிந்து கொஞ்சம், தெரியாமல் மிச்சம் என்று பிழைகள் செய்வது நமது பிழைப்பாய் இருக்கிறது...

அதற்காக, அபிராமி என்னை கை விட்டு விட்டாதே...சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை அல்லவா..இது ஒண்ணும் புதுசு இல்லையே...அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்...அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை காத்தாய்...அவ்வளவு பெரிய ஆலகால விஷத்தின் தன்மையையே நீ மாற்ற வல்லவள் ... நான் செய்யும் சிறு பிழைகள் எம்மாத்திரம் உனக்கு....

அப்படியே நீ எனக்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலும்...நான் உன்னை கோவிக்க மாட்டேன் ...ஏன் என்றால் எனக்கு எது நல்லது கெட்டது என்று உனக்குத் தெரியாதா ?

பாடல் 


வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர் 
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு 
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.- 
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.

பொருள் 

வெறுக்கும் = வெறுக்கும் படியான

தகைமைகள் = காரியங்கள், செயல்கள்

செய்யினும் = செய்தாலும்

தம் அடியாரை = தங்களுடைய அடியார்களை 

மிக்கோர் = பெரியவர்கள் 

பொறுக்கும் தகைமை = பொறுக்கும் செயல்

புதியது அன்றே = ஒன்றும் புதியது அல்லவே

புது நஞ்சை உண்டு = புது நஞ்சை உண்டு (பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை) 

கறுக்கும் = கருத்த

திருமிடற்றான் = மிடறு = கழுத்து, மிடற்றான் = சிவன் 

இடப்பாகம் கலந்த பொன்னே = இடப்பாகம் கொண்ட பொன்னே
 
மறுக்கும் தகைமைகள் = நான் வேண்டாம் என்று மறுக்கும் செயல்களை 

செய்யினும்,= நீ செய்யினும்

யானுன்னை வாழ்த்துவனே.= நான் உன்னை வாழ்த்துவனை 

அது என்ன புது நஞ்சு ? நஞ்சு என்பதை கெட்ட காரியம் என்பதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். புது நஞ்சு என்றால் புது புது கெட்ட காரியங்கள். நல்ல காரியங்கள் காலம் காலமாக மாறாமல் இருக்கின்றன. கெட்ட காரியங்கள் காலம் தோறும் மாறி வருகின்றன. எனவே "புது நஞ்சை உண்டு " என்றார். 

நஞ்சு கெடுதல் தான். இருந்தும் சிவன் அதை எடுத்து உண்டான். அபிராமி அதன் விளைவுகளை தடுத்து நிறுத்தினாள். அது போல், தெரிந்தும் நாம் எவ்வளவோ கெட்ட காரியங்களை செய்து கொண்டு இருக்கிறோம்...அவற்றின் விளைவுகளில் இருந்து அவள் நம்மை காப்பாள். 


2 comments:

  1. Good one.Heard about நஞ்சு,not புது நஞ்சு-new word.கெட்ட காரியங்கள் காலம் தோறும் மாறி வருகின்றன.Very true.Thanks for sharing.

    ReplyDelete
  2. அபிராமி பட்டர் என்பதை விட அபிராமி தாசன் என்ற பெயர் ரொம்ப பொருத்தமா இருக்குமோ

    ReplyDelete