Monday, December 31, 2012

வில்லி பாரதம் - சிறப்பு பாயிரம்


வில்லி பாரதம் - சிறப்பு பாயிரம்


வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லி புத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார். 

காப்பியத்தின் முதலில் இறை வணக்கம் பாடுவது மரபு.

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள் வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது. 

வில்லிபுத்துராழ்வார் பாடிய தமிழ் தாய் வாழ்த்து....

பொதிகை மலையில் பிறந்து, பாண்டியர்களின் அரவணைப்பிலே வளர்ந்து, முச்சங்கத்தின் கவனிப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே நீந்தி, கற்றோர் நினைவிலே நடந்து, ஆதி நாள் திருமால் பூமி நீரில் மூழ்கியபோது பன்றியாக அவதாரம் எடுத்து அதை தன் கொம்பிலே தாங்கி வெளியே கொண்டு வந்தார், அப்போது அந்த பூமா தேவியோடு கூடவே பிறந்து வளர்ந்து வந்தவள் இந்த தமிழ் தாய் என்று தமிழின் பெருமையை எடுத்து உரைக்கிறார்.


பாடல் 

பொருப்பிலே பிறந்து தென்னன் 
     புகழிலே கிடந்து சங்கத்து 
இருப்பிலே இருந்து வைகை
     ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
     நினைவிலே நடந்துஓ ரேன
மருப்பிலே பயின்ற பாவை
     மருங்கிலே வளரு கின்றாள்

பொருள் 

பொருப்பிலே பிறந்து = பொருப்பு என்றால் மலை. பொதிகை மலையில் பிறந்து

தென்னன் புகழிலே கிடந்து = தென்னன் ஆகிய பாண்டியர்களின் புகழிலே கிடந்து, அவர்களால் ஆதரிக்கப்பட்டு

சங்கத்து இருப்பிலே இருந்து = முச்சங்கங்களில் இருந்து

வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை = அந்த காலத்தில் அனல் வாதம், புனல் வாதம் என்று வாதம் புரிவார்கள். பாடல் கொண்ட ஏடுகளை தண்ணீரிலோ நெருப்பிலோ போட்டு விடுவார்கள். அது நல்ல பாடலாய் இருந்தால் ஆற்றோடு அடித்து செல்லப்படாமல் நீரை எதிர்த்து வரும், அல்லது தீயினால் கருக்காமல் இருக்கும். அப்படி, வைகை ஆற்றிலே தவழ்ந்து

நெருப்பிலே நின்று =  நெருப்பிலே நின்று

கற்றோர் நினைவிலே நடந்து  = கற்றவர்கள் நினைவிலே என்றென்றும் நடை போட்டு 

ஓ ரேன = கூடவே

மருப்பிலே பயின்ற பாவை = மருப்பு என்றால் கொம்பு. பன்றியின் கொம்பு. திருமால் உலகை கொம்பிலே தூக்கி வந்த போது அந்த பூ மகளோடு கூட வந்த பாவை 

மருங்கிலே வளரு கின்றாள் = மருங்கு என்றால் பெண்ணின் இடுப்பு. பூ மகளின் இடுப்பில் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வருகின்றாள். 

வில்லிபுத்துராழ்வாரை பாரதம் பாடச் சொன்னது அருணகிரி நாதர். அது ஒரு சுவாரசியமான கதை...

 

6 comments:

  1. வில்லிபுத்துராழ்வாரை பாரதம் பாடச் சொன்னது அருணகிரி நாதர் என்பது புது செய்தி. அது என்ன என்று suspense வைக்காமல் சொல்லவும்.
    அவர்கள் இருவரும் சம காலத்தவர்களா?

    ReplyDelete
  2. என்ன ஒரு அருமையான பாடல்

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  4. மாகவி வில்லிபுத்தூராழ்வாரின் தமிழ்ப்பற்று வியந்து போற்றத்தக்கது!!

    ReplyDelete
  5. வில்லிபாரத சிறப்பு பாயிரம் பாடியவர்?

    ReplyDelete