Tuesday, January 1, 2013

தேவாரம் - ஆசைக்கோர் அளவில்லை.


தேவாரம் -  ஆசைக்கோர் அளவில்லை. 

 
மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. பற்றை விட வேண்டும் என்று சொல்ல வந்த வள்ளுவர் கூட பற்றுக பற்றற்றான் பற்றினை என்று கூறுகிறார். எல்லாவற்றையும் விடுங்கள் என்று சொல்லவந்த வள்ளுவர் பற்றற்றான் பற்றினை பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

விட முடியவில்லை. 

திருமூலர் ஒரு படி மேலே போகிறார். இறைவனை கூட அடைய ஆசைப் படாதீர்கள் என்கிறார். 

ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்

இறைவனை அடைய வேண்டும் என்பதும் ஆசை தானே. உள்ளதிற்குள் பெரிய ஆசை அது தான். பேராசை. இறைவனை அடைய வேண்டும் ஆசைப் படுபவன் எப்படி துறவி ஆக முடியும்....

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

எங்கே முடிகிறது ? உலகம் எல்லாம் ஆளக் கிடைத்தாலும் அந்த கடல் மேலும் ஆதிக்கம்  செலுத்த ஆசை வருகிறது. குபேரன் அளவு சொத்து இருந்தாலும் ரசவாத வித்தை கற்று உலகில் உள்ள இரும்பை எல்லாம் தங்கமாக ஆசை வருகிறது. எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் காயகல்பம் தேடி அலைகிறார்கள். கடைசியில் உண்பதுவும் உறங்குவதும் தவிர வேறு ஒன்றும் இங்கு நிகழ்வது இல்லை. 

குழந்தையாக இருக்கும் போது பொம்மை, விளையாட்டு சாமான் என்று ஆசைப் படுகிறோம், அப்புறம் புது புது ஆடைகள், பேனா, புத்தகம், என்று போகிறது ஆசை, வயது வரும் போது எதிர் பாலின் மேல் ஆசை, அப்புறம் வேலை, பணம், அதிகாரம், சொத்து, என்று ஆசைக் கொடி படர்கிறது, பின் நல்ல உடல் ஆரோக்கியம், படுத்தால் தூக்கம், என்று ஆசையின் அளவு குறைகிறது....   நாள் ஆக ஆக இறைவன், சொர்க்கம் என்று ஆசை தடம் மாறுகிறது...இப்படி கிளை விட்டு கிளை தாவும் மனக் குரங்கு. இதில் எந்த ஆசை உயர்ந்தது எந்த ஆசை தாழ்ந்தது ? எந்த ஆசையும் இல்லாமல் இருக்க ஆசைப் படுகிறார் தாயுமானவர் இங்கே...

பாடல்


ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
    ஆளினுங் கடல்மீதிலே
  ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
    அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
    நெடுநா ளிருந்தபேரும்
  நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
    நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
    உறங்குவது மாகமுடியும்
  உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
    ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
    பரிபூர ணானந்தமே.


பொருள் 

ஆசைக்கோ ரளவில்லை = ஆசைக்கு ஒரு அளவில்லை

அகிலமெல் லாங்கட்டி ஆளினுங் = அகிலம் எல்லாம் கட்டி  ஆட்சி செய்தாலும்

கடல்மீதிலே = கடல் மீதும்

ஆணைசெல வேநினைவர் = ஆட்சி செய்ய நினைப்பார்கள்

 அளகேசன் நிகராக = அளகேசன் என்றால் குபேரன். குபேரனுக்கு நிகராக

அம்பொன்மிக வைத்தபேரும் = செல்வம் நிறைய இருக்கும் ஆட்களும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் = இரசவாத வித்தை கற்றுக் கொள்ள அலைவார்கள்

நெடுநா ளிருந்தபேரும் = நெடு நாள் இருந்த ஆட்களும்

நிலையாக வேயினுங் = இன்னும் சாகாமல் இருக்க

காயகற் பந்தேடி = காய  கல்பம்  தேடி 

நெஞ்சுபுண் ணாவர் = மனம் வருந்துவர்

எல்லாம் யோசிக்கும் வேளையிற் = எல்லாம் யோசித்துப் பார்த்தால்

பசிதீர உண்பதும் = பசியாற உண்பதும்

உறங்குவது மாகமுடியும் = உறங்குவதும் ஆக முடியும்

உள்ளதே போதும் = உள்ளதே போதும்

நான் நான் = நான் நான், எனக்கு எனக்கு

எனக் குளறியே = என்று குளறி

ஒன்றைவிட் டொன்றுபற்றிப் = ஒன்றை விட்டு ஒன்று பற்றி

பாசக் கடற்குளே வீழாமல் = பாசக் கடலில் விழாமல்

மனதற்ற = மனதற்ற. மனம் இருந்தால் தானே ஆசை வரும். மனமே இல்லா விட்டால் ? 

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரி. நமக்கு எல்லாம் கிடைத்தால் சுகம். அவருக்கு எல்லாம் இழந்தால் சுகம். 

வித்தாரமும் கடம்பும் வேண்டாவாம் மட நெஞ்சே செத்தாரைப் போலத் திரி என்றார் பட்டினத்தடிகள்

பரிசுத்த நிலையை அருள்வாய் = பரி சுத்தமான நிலையை அருள்வாய் 

பார்க்குமிட மெங்கு = பார்க்கும் இடம் எங்கும்

மொரு நீக்கமற நிறைகி்ன்ற = ஒரு நீக்கம் இல்லாமல் நிறைந்து இருக்கின்ற

பரிபூர ணானந்தமே = முற்றும்  நிறைந்த ஆனந்தமே 

4 comments:

  1. எவ்வளவு தான் எல்லோரும் ஆசை ஒழிக என்று கோஷம் போட்டாலும் உங்கள் BLOG இன்னும் புதிய பாடல்களுடன் வந்து கொண்டே இருக்க வேண்டும். அதை நாங்கள் எப்போதும் படித்து இன்புற வேண்டும் என்ற ஆசையுடன் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெருவிக்கிறேன்.
    WISH YOU A VERY HAPPY NEW YEAR. உங்கள் தமிழ் தொண்டு மேலும் ஓங்கி வளர்க.

    ReplyDelete
  2. யாண்டு பலவாக ஆசை அறாதது யாதென வினவுதிராயின்
    மாண்பி லென் வாழ்வுதனில் மாட்சிமிகு காட்சிகளென
    ஆட்சி ஏதுமிலதாலே ஐயகோயென் வீண்மிகு வாழ்வதிலே

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஞானம் தெரிகிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    ReplyDelete