Saturday, January 19, 2013

இராமாயணம் - சிவந்த பாதங்கள்


இராமாயணம் - சிவந்த பாதங்கள்


உங்கள் வீட்டில் இருந்து பேருந்து நிலையமோ, புகை வண்டி நிலையமோ ஒரு ஐந்து  கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

சாதரணமாக நடந்து போனால் சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். அவ்வளவா கால் வலிக்காது.

அதையே முக்கால் மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். மூச்சு வாங்கும். கொஞ்சம் வியர்க்கும்.

அதையே அரை மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், ஓட்டமும் நடையுமாக போக வேண்டும். கால் வலிக்கும். ரொம்ப மூச்சு வாங்கும். வியர்த்து கொட்டும்.

இன்னும் குறைத்து கால் மணி நேரத்தில் போக வேண்டும் என்றால், தலை தெறிக்க ஓட வேண்டும். காலுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும். கால் எல்லாம் சிவந்து விடும். இல்லையா ?

யோசித்துப் பாருங்கள், இந்த பூலோகம் முழுவதையும், அந்த வானுலகையும் இரண்டே அடியில் நடந்து கடப்பதாய் இருந்தால் எவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கால் வலிக்காது அந்த புவி அளந்த பெருமாளுக்கு ? வைகுண்ட வாசனுக்கு ?

கம்பரின் பாடலைப் பாருங்கள் ....


"உரியது இந்திரற்கு இது’’ என்று.
   உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
   பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
   கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
   சிவந்து காட்டிற்றே!


பொருள்





"உரியது இந்திரற்கு இது’’ என்று = இது இந்திரனுக்கு உரியது என்று. எது இந்திரனுக்கு உரியது ? இந்த உலகம் எல்லாம் இந்திரனின் ஆளுகைக்கு உட்பட்டது. அவன் தேவேந்திரன்.
.
உலகம் ஈந்து போய் = தான் ஈரடியால் பெற்ற உலகம் அத்தனையும் அவனுக்கு ஈந்து , அவனுக்கு கொடுத்து, பின் தான் போய்
.
விரி திரைப் = திரை என்றால் அலை. அலை விரிக்கும்

பாற்கடல் பள்ளி மேவினான் = பாற்கடலில் சென்று பள்ளி கொண்டான்

கரியவன் = கரிய செம்மல். கரி என்பதற்கு சாட்சி என்று ஒரு பொருளும் உண்டு. இந்த உலகில் நிகழும் அனைத்திற்கும் அவனே சாட்சி. அவன் எல்லாவற்றையும் பாத்துக் கொண்டு இருக்கிறான். அவன் அறியாதது ஒன்றும் இல்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

(ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி என்பது வள்ளுவம். ஐந்து புலன்களை வென்றவர்களின் ஆற்றலுக்கு இந்திரனே சாட்சி)

.
உலகு எலாம் = அனைத்து உலகங்களையும்

கடந்த தாள் இணை = கடந்த, அளந்த, இரண்டு திருவடிகளை

திருமகள் கரம் தொடச் = திருமகளின் கரம் தொட

சிவந்து காட்டிற்றே = அது (திருவடி) சிவந்து காணப்பட்டது. ஒரு வேளை திருமகள் தொட்டதால் அவள் கையில் இருந்த சிவப்பு அவன் காலுக்குப் போய் இருக்குமோ ? அப்படியும் பொருள் கொள்ளலாம். அதை விட, நடந்து சிவந்த பாதங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.


1 comment:

  1. தொட்டால் பெண்களின் முகம்தான் வெட்கத்தால் சிவக்கும் என்பார்கள். இங்கே என்னடா என்றால், கால்கள் கூடச் சிவக்கின்றன!

    ReplyDelete