Saturday, January 26, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே


இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே 

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினை வேரறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன் பரன்பாதமுமென்
சென்னித் தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே,

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி - பொருளாக்கி என்றால் என்ன ? 

என்ன இந்த பாட்டு ரொம்ப கடினமா இருக்கே. இதற்கு பொருள் என்ன ? என்று நாம் கேட்பது உண்டு அல்லவா ? 

பொருள் தெரிந்தால் பாடல் இனிக்கும். 

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு விடை கண்டால், வாழ்வு இனிக்கும். அர்த்தம் இல்லாமல் எப்படி வாழ்வது ?
 
போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பார் மணிவாசகர். நம் வாழ்வின் முதல் பொருள் இறைவன். அவன் தான் உண்மை, அவன் தான் வாழ்வின் அர்த்தம். 

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

என்பார் அபிராமி பட்டர். 

நம்மையும் ஒரு பொருளாக்கி, நாய் சிவிகை (பல்லக்கு) ஏற்றி வைத்து என்பது திருவாசகம் 

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவர் இராமானுஜர்


அருள் சுரந்த - சுரத்தல் என்றால் தானாகவே வருவது. சுவையான உணவைப் பார்த்தால் உமிழ் நீர் சுரக்கும். குழந்தை அழுவதைப் பார்த்தால், தாய்க்கு பால் சுரக்கும். நம் துன்பத்தைப் பார்த்தால் பெரியவர்களுக்கு நம் மேல் அருள் சுரக்கும். 

அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!
 
என்பது மணிவாசகம்.நமக்கு அருள்வதில் இறைவனுக்கும் இறைவிக்கும் போட்டி. அவளுக்கு முன்னாடி ஓடி வந்து அவன் அருள்வானாம்.

எனக்கு அருள் சுரந்த இராமானுஜனே.


முன்னைப்பழவினை வேரறுத்து - நம்முடைய பழைய வினைகளின் வேரை அறுத்து. வேரை அறுத்துவிட்டால் மீண்டும் முளைக்காது. 

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை  முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என்பார் மாணிக்க வாசகர்.

வினை ஓட விடும் வடி வேல் என்பது அருணகிரி வாக்கு 

எந்தன் முன் வினைகளின் வேரை அறுத்தவன் இராமானுஜன்....

 
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன் = பன்னுதல் என்றால் புகழுதல், ஆராய்ந்து சொல்லுதல். அப்படி ஊழி முதல்வனாகிய திருமாலை பாடப் பணித்த இராமானுசன் 

பாதமுமென் சென்னித் தரிக்கவைத்தான் = அவனுடைய பாதங்களை என் தலையின் மேல் சூடிக் கொள்ள வைத்தான்

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன் என்பார் பட்டர் அபிராமி அந்தாதியில் 

திருவடிகளைப் பற்றி பேசாத பக்தி இலக்கியம் ஒன்று இல்லை. 


எனக்கேதும் சிதைவில்லையே - இராமானுஜன் பாதங்களை என் தலை மேல் சூடிக்கொண்ட பின் எனக்கு ஒரு சிதைவு இல்லை. சிதைவு என்றால் உடைத்தல், பிரிதல். ஒரு பக்கம் பொருள் ஆசை, பொன்னாசை, மண்ணாசை மறு பக்கம் இறைவன், ஆன்மீகம், பக்தி, முக்தி என்று எல்லோரும் பிரிந்து கிடக்கிறோம். இதுவும் வேணும், அதுவும் வேணும். சில சமயம் இதன் பின்னால் போகிறோம், சில சமயம் அதன் பின்னால். ஒன்றில்லும் முழுமை கிடையாது. பிரிந்து, சிதைந்து கிடக்கிறோம். இராமானுஜன் பாதம் பட்டவுடன் சிதைவு ஒன்று இல்லாமல் மனம் ஒருமுகப் பட்டது.




2 comments:

  1. அருள் சுரந்த,எனக்கேதும் சிதைவில்லையே-விளக்கங்கள் மிக மிக அருமை.நன்றி.

    ReplyDelete
  2. Fabulous buffet of Arunagiri, Manikka vasaga peruman, and battar.

    ReplyDelete