Wednesday, January 23, 2013

பிரபந்தம் - பழுதான கடந்த காலம்


பிரபந்தம் - பழுதான கடந்த காலம் 


நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும் ?

என்ன சாதித்தோம் ? பிறந்தோம், வளர்ந்தோம், ஏதோ கொஞ்சம் படித்தோம், வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள்....வெளியே சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா ? 

பணம் காசு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, என்னனமோ செய்கிறோம். பணத்தாசையை தாண்டி பெண்ணாசை. 

எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஊமை கனவு கண்டால் அதை எப்படி மற்றவர்களுக்கு சொல்ல முடியாமல் தவிப்பானோ, அதை விட மோசமாக இருக்கும் நம் வாழ்க்கை. 

வாழ் நாட்கள் எப்படியோ ஓடி விட்டன. மீதி நாட்களை எப்படி உருப்படியாகச் செலவழிப்பது ? இந்த சுழலில் இருந்து நாம் விடுபட என்ன வழி ? உய்வதற்கு நாராயாணா என்ற நாமத்தை கண்டு கொண்டதாக நம்மாழ்வார் சொல்கிறார்.

பாடல்

சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.


பொருள் 

சேமமேவேண்டித் = நன்மையே வேண்டி

தீவினைபெருக்கித் = தீய வினைகளைப் பெருக்கி

தெரிவை மார் உருவமே மேவி = பெண்களின் உருவத்தில் மனம் லயித்து

ஊமனார் = ஊமை 

கண்டகனவிலும் = கண்ட கனவைவிட 

பழுதாய் = மோசமாய் 

ஒழிந்தன கழிந்த அந் நாட்கள் = வீணாகிப் போய் விட்டன இத்தனை நாட்களும்

காமனார் தாதை = மன்மதனின் தந்தையான 

நம்முடையடிகள் = நம்முடைய கடவுள்

தம்மடைந்தார்மனத்திருப்பார் = தம்மை அடைந்தார் மனத்தில் இருப்பார்

நாமம் = திரு நாமத்தை

நானுய்ய = நான் உய்வதற்கு 

நான்கண்டு கொண்டேன் = நானே கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும்நாமம் = நாராயணா என்னும் நாமம்


அந்த நாமம் உங்களையும் உய்விக்கட்டும்
 

1 comment:

  1. முதல் இரண்டு வரிகள் இனிமையானவை. நன்றி.

    ReplyDelete