Wednesday, January 30, 2013

திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்


திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்  


நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நடப்பதை எல்லாம் ஒரு மூவி கேமராவில் பதிவு செய்து அதை fast forward இல் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு வரும் படி எடிட் பண்ணி போட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? 

ஏதோ பிறந்த குழந்தை கிடு கிடு என்று வளர்ந்து, அங்க இங்க ஓடி கடைசியில் சுடுகாட்டில் குழிக்குள் செல்வது போல இருக்கும். 

இன்னும் கொஞ்சம் fast forward பண்ணினால் பிறந்தவுடன் நேரே ஓடிப் போய் இடு காட்டு குழிக்குள் இறங்குவது போல இருக்கும்.

மாணிக்க வாசகர் இந்த உலக வாழ்க்கையை சற்று தள்ளி நின்று பார்க்கிறார். 

எதுக்கு எந்த ஓட்டம் ? 

இடு காட்டுக்கு போக ஏன் இத்தனை பரபரப்பு ?

கருவறை தொடங்கி கல்லறை வரை ஒரே ஓட்டம் தான். "சாமாறே விரைகின்றேன்" என்றார். சாவதற்காக இவ்வளவு விரைவாக சென்று கொண்டு இருக்கின்றேன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார்.
 
 
இந்த இடைப்பட்ட நேரத்தில் இறைவனை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையை வீணாக்கி கொண்டு இருக்கிறோமே என்று வருத்தப் படுகிறார்...
 
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

 
பொருள் 


ஆமாறுன் திருவடிக்கே = உன் திருவடிக்கே ஆகுமாறு
 
அகங்குழையேன் = என் அகம் (மனம்) குழையேன். குழைய மாட்டேன்
 
அன்புருகேன் = அன்பால் உருக மாட்டேன் 

பூமாலை புனைந்தேத்தேன் = பூ மாலை புனைந்து ஏத்தேன். ஏத்துதல் = உயர்வாக சொல்லுதல், புகழுதல்.
 
புகழ்ந்துரையேன் = உன்னை புகழ்ந்து உரைக்க மாட்டேன்
 
புத்தேளிர் கோமான் = ஏழு உலகங்களுக்கும் அரசனே
 
நின் திருக்கோயில் = உன்னுடைய கோவிலை
 
தூகேன் = பெருக்கி சுத்தம் செய்ய மாட்டேன்
 
மெழுகேன் = நீர் விட்டு கழுவ மாட்டேன்
 
கூத்தாடேன் = உன் கருணையை நினைத்து கூத்தாட மாட்டேன் 

சாமாறே விரைகின்றேன் = இதை எல்லாம் விட்டுவிட்டு சாவதற்காக விரைகின்றேன்
 
சதுராலே சார்வானே = சதுரர் என்றால் திறமையானவர், புத்திசாலி என்று அர்த்தம். 

"தந்தது நின் தன்னை, கொண்டது என் தன்னை யார் கொலோ சதுரர் "
 
என்பார் மணிவாசகர் பிறிதொரு இடத்தில். சார்தல் = சேர்ந்து இருத்தல். இறைவன் கூட புத்திசாலிகள், திறமைசாலிகள் பக்கம் சார்ந்து இருப்பானாம்.
 
இறைவனை மனம், வாக்கு, காயம் இந்த மூன்றினாலும் வணங்க வேண்டும்.
 
அகம் குழைதல், அன்பு உருகுதல் = மனம்
 
புனைந்து ஏத்தேன், புகழ்ந்துரையேன் = வாக்கு
 
தூகேன், மெழுகேன், கூத்தாடேன் = காயம் (உடல்)

5 comments:

  1. சாமாறே விரைதல் - நல்ல சொல்!

    ஆனால், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு, இறைவனை வழி படுவது என்பது சும்மா ஒரு ஓட்டையான பதிலாகத் தோன்றுகிறது. தன்னைத் தானே அறிதல் என்பது ஒரு படி மேலான பதில் என்று எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தன்னை அறிய இறைவனை வழிபடுதல் நல்ல வழியாக பல மகான்களால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. திருவாசகத்தை படித்து மனம் உருகுதல் கீதை படித்து மனம் இறுகுதலை விட எவ்வளவோ மேல் என்று உலகில் பார்த்தாலே தெரிகிறது. பக்தி நெறியில் பழகியவர்களுக்கு தான் அதன் பெருமை புரியும். அதை புரிய வைக்கும் படியான அழகான ஒரு திருவாசகப் பாட்டை எடுத்து, ஐயா மிகச் தெளிவான விளக்கம் தந்திருக்கிறார். இதில் ஓட்டை காணுவது தான் அறிதல் என்றால், அந்த அறிதல் எவ்வளவு படி மேலாக இருந்தாலும் அது எனக்கு வேண்டாம்.

      Delete
  2. மிக்க நன்றி ஐயா. அற்புதமான விளக்கம்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி ஐயா!
    www.eppoluthu.blogspot.in

    ReplyDelete
  4. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏

    ReplyDelete