Friday, February 1, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - இறைவன் இருக்கும் இடம்


இராமானுஜர் நூற்றந்தாதி -  இறைவன் இருக்கும் இடம் 


இறைவன் எங்கே இருப்பான் ? இதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் எவ்வளவு நல்லா இருக்கும் ?

விடை கிடைத்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி யோசிப்போம்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் . அவன் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.

 வைகுண்டாமோ, கைலாசமோ, ஏதோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும் அல்லவா ?

சரி, அங்க தனியா உட்கார்ந்து கொண்டு அவன் என்ன செய்வான் ? போர் அடிக்காதா அவனுக்கு ?

இங்க அவனுடைய பக்தர்கள் அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு வந்தால் அவனுக்கும் சந்தோஷம் , அவன் பக்தர்களுக்கும் மகிழ்ச்சி.

இது நமக்குத் தெரிகிறது . அவனுக்கும் தெரியும் தானே ? அப்படினா அவன் எங்கு இருப்பான் ?

அடியார்கள் மத்தியில் அவன் இருப்பான் அல்லவா ?

நேரே அங்க போனால் அவனைப் பார்த்து விடலாமே ?

அவன் அங்க இருப்பானான்னு உங்களுக்கு சந்தேகம் இருக்கா ? நான் சொன்னா நம்ப மாட்டீங்க...

அபிராமி பட்டர் சொன்னா நம்புவீங்களா ?


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

அடியார்கள் பின்னாடியே போனேன் என்கிறார் பட்டர்.



போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர்.

மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர்.

ஔவையார் சொன்னா ?


பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே


மாணிக்க வாசகர் சொன்னா ?

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய் பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 



சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டர் தொகையில்,  சொல்கிறார்

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று


வள்ளுவர் சொன்னால் கேட்பீங்களா ?

பற்றுக பற்றற்றான் பற்றினை என்று பற்றினை துறந்த துறவிகளின் , அடியார்களின் பற்றை பற்றச் சொல்கிறார் வள்ளுவர் ....


திருவரங்கத்து அமுதனார் இராமானுஜர் என்ற அடியாரை பற்றிக் கொண்டார்


அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம்.

எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும்.

அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...

ஏன் என்றால், குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....

பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற செல்வம் = எனக்கு உற்ற செல்வம் = எனக்கு கிடைத்த செல்வம்

இராமா னுசனென்று = இராமானுசன் என்று

இசையகில்லா = என்னோடு இசையாத, ஒத்துப் போகாத

மனக்குற்ற மாந்தர் = மனதில் குற்றம் உள்ள மாந்தர்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் எனக்கு புகழ் தான்

அவன் = இராமானுசன்

மன்னியசீர் = நிலைத்த பெருமை

தனக்குற்ற அன்பர் = அவனுடைய அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய (இராமானுசனின்) நாமங்கள்

சாற்றுமென் = சாற்றும் என்  = சொல்லும் என்னுடைய

பா இனக்குற்றம் = பாவின் (பாடலின் ) குற்றம்

 காணகில் லார் = காண மாட்டார்கள்
 பத்தி ஏய்ந்த = பக்தி நிறைந்த, ஏறிய

இயல்விதென்றே = இயல்பு இது என்றே.

3 comments:

  1. Liked the Title. எனக்கு கிடைத்த செல்வம் இராமானுசன்-What a thought!பத்தி ஏய்ந்த இயல்விதென்றே-ஏன் எனில்,எம்பெருமானாரிடத்து பக்தியாலே வந்த முயற்சி என்று சொல்லுவது-how humble he is!Thanks a lot for the different interpretation.

    ReplyDelete
  2. பாட்டை விட அதற்க்கான முன்னுரை ரொம்ப அருமை. your blog is becoming more and more interesting. keep writing.

    ReplyDelete
  3. அருமையான உதாரணங்கள் காட்டியிருக்கிறாய். நன்றி.

    ReplyDelete