Monday, February 4, 2013

இராமாயணம் - இராம நாமம்


இராமாயணம் - இராம நாமம் 

அனுமன் இலங்கயையை நோக்கி செல்கிறான். நடுவில் பல இடையூறுகள் வருகின்றன. ஒவ்வொன்றாய் வென்று மேலே செல்கிறான். 

இப்படியே பல இடையூறுகள் வந்த கொண்டே இருந்தால் என்று போய்  இலங்கையை அடைவது என்றுஒரு வினாடி கவலைப் பட்டான். 

மறு நிமிடமே கவலை தீர்ந்தது....விடை கிடைத்து விட்டது. நம்மிடம் தான் இராம நாமம் இருக்கிறதே என்று நினைத்தான், அத்தனை கவலையும் போய்  விட்டது. 

பாடல் 


ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? "இராம!" என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல்' என வலித்தான்.


பொருள் 

ஊறு = துன்பங்கள் 

கடிது ஊறுவன  = வேகமாய் வருகின்றன 

ஊறு இல் அறம் = துன்பம் இல்லாத அறத்தை 

உன்னா = எண்ணி பார்க்காத 

தேறல் இல் = தெளியும் அறிவு இல்லாத 


அரக்கர் புரி தீமை = அரக்கர்கள் புரிந்த, புரிகின்ற, புரியும் தீமைகளை 


அவை தீர = அவை தீர 


ஏறும் வகை எங்கு உள்ளது? = அந்த தீமைகளை தாண்டி கரை ஏறும் வழி எங்கு உள்ளது ?
 

"இராம!" = இராம 

என எல்லாம் மாறும் = என்று கூறினால் எல்லாம் மாறும் 

அதின் மாறு பிறிது இல் = அதற்க்கு மாற்று பிறிது ஒன்றும் இல்லை 

என வலித்தான் = என நினைத்தான். 

கம்ப இராமாயணத்தின் சாரம் சுந்தர காண்டம். 

சுந்தர காண்டத்தின் சாரம் இந்தப் பாடல். 

இறைவனை விட அவன் நாமம் உயர்ந்தது. 

இராமனை விட இராம நாமம் உயர்ந்தது. 

இராமனை விட இராம நாமம் எப்படி உயர்ந்ததாக இருக்க முடியும் ? 

இதற்க்கு பல விளக்கம் தர முடியும் ...இருந்தாலும் ஒரே ஒரு உதாரணம்....

இராம நாமத்தை சொல்லி அனுமன் கடலை தாண்டினான்....இராமரோ பாலம் கட்டித்தான் போனார் 

அனுமன் எவ்வளவு பெரிய பலசாலி. அவனுக்கு சில துன்பங்கள் வந்தது. என்ன செய்வோம் என்று நினைத்த வேளையில், இராம நாமம் நினவுக்கு வந்தது. 

அப்பேற்பட்ட பலசாலியான அனுமனுக்கு துன்பம் என்றால் அது எவ்வளவு பெரிய துன்பமாய் இருக்க வேண்டும் ?

அந்த துன்பத்தை கூட இராம நாமம் போக்கி விடும் என்றால் உங்கள் துன்பம் எம்மாத்திரம் ?

இராம நாமத்தை சொல்லுங்கள் ... எல்லாம் மாறும்...

No comments:

Post a Comment