Thursday, February 7, 2013

திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற


திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற 


அது ஒரு சின்ன அழகிய கிராமம். ஊரைச் சுற்றி மலைகள். குளு  குளு  என்று எப்போதும் இருக்கும். மெல்லிய தென்றல் உயிர் உரசிப் போகும்.

ஊரைச் சுற்றி நிறைய மா மரங்கள். மா மரங்களில் குரங்குகள் ஜாலியாக குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருகின்றன. கிளைக்கு கிளை தாவம் போது அந்த கிளைகள் படாரென்று விடுபடுகின்றன அப்படி விடுபட்ட கிளைகள் மேகத்தில் சென்று மோதுகின்றன. அப்படி மோதும் போது, அந்த மேகத்தில் இருந்து நீர் துளிகள் சிதறுகின்றன. அப்படை சிதறிய நீர்த் துளிகளை மழை என்று நினைத்து அங்கிருந்த மான்கள் மரத்தடியில் சென்று ஒதுங்குகின்றன.

அப்படிப்பட்ட அழகிய ஊர் திருவண்ணாமலை.

திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை   நினைக்க முக்தி

என்று சொல்லுவார்கள்.

அங்கே போகக் கூட வேண்டாம்....அதை நினைத்தாலே முக்தி தான்

அங்கு உறையும் அண்ணாமலையாரின் திருவடிகளை நினைத்தாலே பழைய வினைகள் எல்லாம் அற்றுப் போகும். நினைக்க முக்தி தரும் திருத்தலம்.

ஞான சம்மந்தரின் பாடல் 


தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பொருள்




தேமாங்கனி = சுவையான மாங்கனி

கடுவன்கொள = குரங்கு உண்ண

விடுகொம்பொடு = பழத்தை பறித்த பின் பட்டென்று விடுபட்ட கிளை

தீண்டித் = தீண்டியதால்

தூமாமழை = தூவுகின்ற மழை

துறுவன்மிசை = துறுவன்  என்றால் பாறை. பாறை மேல் விழுந்து

சிறுநுண்துளி சிதற = சிறிய நுண்மையான மழைத்துளிகள் சிதற

ஆமாம் = ஆ+ மான் = அந்த மான்

பிணை யணையும் = பிணை + அணையும் = ஜோடியை அணைத்துக்  கொண்டு

பொழில் = பூங்கா, மரங்கள் நிறைந்த இடம்

அண்ணாமலை யண்ணல் = உள்ள அண்ணாமலையில் உள்ள அண்ணல்

பூமாங்கழல் = மலர் சேர்ந்த கழல்

புனைசேவடி = அணிந்த திருவடி

நினைவார்வினை யிலரே. = நினைப்பவர்களுக்கு வினை இல்லாமல் போகும்.

எல்லா இடமும் சுற்றிய ரமண மகரிஷி கடைசியில் திருவண்ணாமலை வந்து சேர்ந்து, அங்கேயே சமாதி அடைந்தார்.

அருணகிரி நாதருக்கு முருகன் அருளிய இடம்.

மாணிக்கவாசகர் உருகிப் பாடிய தலம்

இன்றும் அண்ணாமலை அழகாகத்தான் இருக்கிறது.

முடிந்தால் ஒரு நடை போய்  விட்டு வாருங்கள்.

இல்லையேல் மனதால் ஒரு முறை நினையுங்கள்.

அவன் அருள் மழை உங்களையும் நனைக்கட்டும்


1 comment:

  1. திஞனசம்பந்தரின் பாடல்களில், இயற்கை வருணனை அதிகமோ? இந்த blogஇல் வந்த பல ஞானசம்பந்தர் பாடல்களைப் படித்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

    ReplyDelete