Monday, March 18, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 3


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 3


கணவன் மனைவிக்கு நடுவில் ஊடல் வருவது இயற்கை. அதுவே கொஞ்சம் சண்டையாகவும் மாறலாம். என்கூட பேசாதிங்க, என்னை ஒண்ணும் தொட வேண்டாம் என்று மனைவி கோபித்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.

கோபத்தில் அந்த அம்மா எம்மை தீண்டாதீர் என்றார். 

அதை தெய்வ வாக்காக கொண்டு, மனைவி "திரு நீல கண்டத்தின் மேல் ஆணை, எம்மை தீண்டாதீர் " என்று சொன்னதால் மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட தொடுவது இல்லை என்று விரதம் பூண்டார் திருநீல கண்டர்.  

மனைவியும் அப்படி சொல்லிவிட்டாரே தவிர, கணவன் மேல் உள்ள அன்பு துளியும் குறைவில்லை. அவர் இன்னொரு பெண்ணின் வீடு சென்றது குற்றம்தான். கோவித்தது சரிதான். அதுக்காக, அவரிடம் பேசாமல் இல்லை, அவர்க்கு வேண்டியது செய்யாமல் இல்லை....தொடுவதும், தொட்டுக்கொள்வதும் மட்டும் இல்லை. 

கணவன் மனைவிக்கு நடுவில் இந்தத் திரை. வெளியே சொல்ல முடியுமா ? 

ரொம்ப அந்தரங்கமான விஷயம். சேக்கிழாருக்கு சொல்லவும் வேண்டும். விரசத்தை தொட்டு விடவும் கூடாது. 

பாடல் 

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் 
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய 
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி 
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார் 

பொருள் 





கற்புறு மனைவியாரும் = கற்புள்ள அந்த மனைவியும் 

கணவனார்க்கு ஆன எல்லாம் = கணவருக்கு வேண்டிய எல்லாம் 
 
பொற்புற = பொற்பு என்றால் பொலிதல், துலங்குதல் (with brightness )

மெய் உறாமல் = மெய் தீண்டாமல். பொற்பு உற , மெய் உறாமல் - சேக்கிழாரின் தமிழ் கொஞ்சுகிறது.  

 பொருந்துவ போற்றிச் செய்ய  = பொருத்தமானவற்றை போற்றி செய்தார். ஏனோ தானோ என்று செய்யவில்லை. 

இல் புறம்பு ஒழியாது = இல்லத்திருக்கு வெளியே தெரியாமல் 

அங் கண் இருவரும் = அங்கே இருவரும் 

வேறு வைகி  = வேறு வேறு மனிதர்களை போல வாழ்ந்து 

அன்புறு புணர்ச்சி இன்மை = அன்பினால் உண்டாகும் மெய் இன்பம் இன்றி 

அயலறியாமை வாழ்ந்தார் = அயலில் உள்ளவர்கள் அறியாமல் வாழ்ந்தார்கள். தங்களுக்குள் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தார்கள்.  கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனை யாருக்கும் வெளியே தெரியக் கூடாது என்பது ஒரு நல்ல மரபு. நாலு சுவற்றிற்குள் நடப்பது நாலு சுவற்றிற்குள்ளேயே இருக்க வேண்டும். வாழ்பவர்கள் குயவர் குலத்தில்  பிறந்த படிப்பு அறிவு இல்லாதவர்கள். 

தமிழர்களின் வாழ்க்கை நெறி, பண்பாடு. 

சரி இப்படி எத்தனை நாள் தான் வாழ்ந்தார்கள் ? அப்புறம் என்னதான் ஆச்சு ?

நானும் ஆவலாய் இருக்கிறேன் அறிந்து கொள்ள ....




No comments:

Post a Comment