Wednesday, March 27, 2013

குறுந்தொகை - மொழி தெரியாத காதலன்

 குறுந்தொகை - மொழி தெரியாத காதலன் 



காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள்...காதுமா இல்லை ? மொழி தெரியாத  பற்றிய ஒரு பாடல் குறுந்தொகையில்...


கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் 
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி 
ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே 
எழுவினி வாழியென் னெஞ்சே முனாது 
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
மொழிபெயர் தேஎத்த ராயினும் 
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே. 


படிச்சாச்சா ? நல்லா இருக்குல ? எவ்வளவு இனிமையான பாடல்...அப்படின்னு சொல்லிட்டு போனா "உன்னை தூக்கி சைப்ரஸ்ல போட "னு  என்கூட சண்டைக்கு வருவீர்கள் 

சீர் பிரிக்கு முன், வார்த்தைக்கு வார்த்தைக்கு அர்த்தம் பார்க்குமுன் , பாடலின் பின்னணியை பார்ப்போம் ...


அவளுக்கு அவன் மேல் காதல். 

இரண்டு பேருக்கும் மொழி கூட பொது கிடையாது. எப்படிதான் காதலை சொன்னார்களோ. அதுதான் சுவாரசியமான விஷயம் 

அவன், அவனுடைய சொந்த ஊருக்குப் போய் விட்டான்....காதலிக்கு   வழக்கம் போல் கை வளையல்கள் நெகிழ்கிறது, தூக்கம்  வரவில்லை, (மின்சாரம், மின் விசிறி இல்லாமல் அந்த காலத்தில் எப்படி  தான் தூங்கினார்களோ ?)...பேசாம அவன் இருக்கும் ஊருக்கு போயிரலாமா  என்று யோசிக்கிறாள் ..என்ன அந்த ஊரில் எல்லோரும் வேறு மொழி பேசுபவர்கள் ... 

முதலில் பாடலை சீர் பிரிப்போம் 



கோடு ஈர் இலங்கு வளை நெகிழும் நாள் தொறும் 
பாடு இல் கலி உழும் கண்ணோடு புலம்பி 
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே 
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது 
குல்லை கண்ணி வடுகர் முனை அது 
பல் வேறு கட்டி நல் நாட்டு உம்பர் 
மொழி பெயர்த்தே எத்தர் ஆயினும் 
வழி பாடல் சூழ்ந்திசினி அவருடைய நாடே 

நிறையவே புரியுது இல்ல ?

வார்த்தை வார்த்தையா பிரிச்சு மேஞ்சுருவோமா ?







கோடு ஈர் = குற்றம் இல்லாத, சங்கு வளையல் என்று பொருள் சொல்வாரும் உண்டு  

இலங்கு வளை = விளங்கும்  வளையல். இலிங்கி என்றால் துறவி என்று பொருள். இலங்கை என்ற சொல் பிரிந்து சென்ற என்ற பொருளில் வந்து இருக்குமோ ?


நெகிழும் நாள் தொறும் = கழன்று விழும் வளையல் நாள் தோறும்

பாடு இல = முடியல 

கலி உழும் = கலி என்றால் துன்பம். சனீஸ்வரனுக்கு கலி பகவான் என்று பெயர் உண்டு. கலி யுகம் என்று ஏன் சொல்கிறார்கள். துன்பம் நிறைந்த யுகம். கலி உழும் - துன்பத்தில் உழலும்

கண்ணோடு புலம்பி = கண்ணோடு புலம்பி. கண் கூட பேசி.  "நீ தான அவன பார்த்த, சந்தோஷப் பட்ட ..இப்ப எதுக்கு அழற "

ஈங்கு இவண் உறைதலும் = இப்படி வாழ்வதை காட்டிலும்

உய்குவம் ஆங்கே = அங்கே போய் பிழைப்போம். உய்தல் என்றால் தப்பித்து. போதல் . இந்த துன்பத்தில் இருந்து தப்பிப் போய்

எழு இனி  வாழி என் நெஞ்சே = எந்திரி என் நல்ல நெஞ்சே

முனாது = முன்னே உள்ளவாறு

குல்லை கண்ணி = கண்ணி என்றால் பூக்கள் தொடுத்த மாலையின் ஒரு பகுதி. "ஒரு கண்ணி பூ " என்கிற வழக்கம் இன்றும் உண்டு. குல்லை என்ற பூவை மாலையாக அணிந்த


வடுகர் முனை அது = வடுகர் வாழும் ஊர் அது

பல் வேறு = பல வேலைகளை செய்யும்

கட்டி = அதுதான் ஹீரோவின் பெயர்

நல் நாட்டு உம்பர் = உம்பர் என்றால் உயர்ந்த, சிறந்த என்று பொருள். உம்பர் கோன் என்பது இந்திரனின் பெயர். தேவர்களின் தலைவன். இங்கே நல்ல நாட்டின் தலைவன் 

மொழி பெயர்த்தே எத்தர் ஆயினும் = வேற்று மொழி பேசும் மக்கள் ஆயினும். மொழி  பெயர்த்தல் என்றால் ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றுவது . இந்த இடத்தில் வேற்று மொழி பேசுபவர்கள் உள்ள ஊர்

வழி பாடல் = அந்த வழி செல்லுவது

சூழ்ந்திசினி = எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். எப்படி போறதுன்னு சிந்திக்க வேண்டியதுதான். சூழ்தல் சிந்தித்தல்.


அவருடைய நாடே = அவரு ஊருக்கு

அந்த காலத்து பெண்கள் கொஞ்சம் போல்டுதான் போல இருக்கு. கிளம்பிற  வேண்டியதுதான் என்று யோசிக்கிறாள்.

இந்தப் பாடல்கள் எப்போது எழுதப்பட்டது தெரியுமா ?

பேராசிரியர் வையாபுரி பிள்ளை, இலக்கியங்களின் காலங்களை வரையறுப்பதில்  ஒரு அறிவியல் பார்வை கொண்டவர். அவருடையவை ரொம்ப conservative estimate . அவருடைய கணிப்பின்படி, இந்த பாடல்கள் எழுதப்பட்டவை  மூன்றாம் நூற்றாண்டு. நாம் இருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 1800 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பாடலை  நீங்கள் இப்போது படித்தீர்கள்.

ஆச்சாரியமாக இல்லை !

  

5 comments:

  1. For how long these poems will survive? Even now we cannot understand a single phrase of the poem without some explanation. It looks like some other language. Not at all tamil. How are we going to pass on these to the next generations?

    ReplyDelete
  2. நண்பரே...

    வணக்கம், கம்பராமாயணக் கடலில் நீந்த வேண்டும் என்று பல நாட்கள் ஆசை, உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பாடல்களும்,சீர்பிரித்தலும்,சீர்களுக்கு பொருள் கூறுதலும்,பாடல்களின் முழுவிளக்கமும் மேலும் ஆவலை தூண்டுகின்றன. தாங்கள் கூறும் வகையிலான விளக்கங்களுடன் சந்தையில் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?எனில் புத்தகம் மற்றும் ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட வேண்டும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன் நண்பரே.....நன்றி....

    ReplyDelete

  3. இராமாயணம் மூலமும் உரையும் பற்றி ஏராளமான புத்தககள் இருக்கின்றன. நான் எழுதுவது பல புத்தங்கள், உரைகள், உபன்யாசங்கள் (நான் கேட்டவை), தமிழ் அகராதி (வார்த்தைகளின் அர்த்தங்கள்) போன்றவற்றின் தொகுப்பு. சொந்தம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. எல்லாம் இரவல் தான். கேட்டதை, பார்த்ததை, படித்ததை பகிர்ந்து கொள்ளுகிறேன். அவ்வளவுதான்.

    வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்
    வாய்ப்புற தேனை ஊர் புறத் தருவேன்

    என்று கண்ணதாசன் கூறிய மாதிரி பூக்களில் உள்ள தேனை சேகரித்து தருகிறேன். அவ்வளவுதான் என் வேலை.

    தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. மொழி தெரியாத ஊரில் இருந்து வந்து, காதல் பண்ணிவிட்டுப் போய் விட்டான். இவளும் கிளம்பலாம் என்று எண்ணுகிறாள்! ஒரு சினிமா கதை மாதிரி இருக்கு.

    ReplyDelete
  5. Wowww... What a poem... அருமை 👌 👌 👌

    ReplyDelete