Tuesday, March 19, 2013

சிலப்பதிகாரம் - கூடான கூடலான்


சிலப்பதிகாரம் - கூடான கூடலான் 


மதுரை நகருக்கு கூடல் நகர் என்று ஒரு பெயர் உண்டு. நான் மாடக் கூடல் என்றும் சொல்லுவார்கள். 

கூடல் நகரை ஆள்வதால் பாண்டிய மன்னன்  கூடலான் என்று அழைக்கப்பட்டான்.

இந்த உடலை கூடு என்று கூறுவார்கள் . கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள்  அந்தப் பணம் என்பார் ஔவையார். 

உயிர் போய் விட்டால் இந்த உடல் வெறும் கூடு தானே.

அப்படி பாண்டிய நாட்டை ஆண்ட கூடலான், ஒரு நாள் ஒரு பெண்ணின் கூந்தலை கண்டு அஞ்சி  உயிரை விட்டு வேறு கூடாகிப் போனான்...அது எப்போது தெரியுமா ?



பாடல் 

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் 
ஆவி குடிபோன அவ்வடிவம்--பாவியேன் 
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் 
கூடலான கூடாயி னான்

பொருள் 


காவி யுகுநீருங் = காவி  உகுக்கும் நீரும் = சிவந்த நீரை உதிர்க்கும். கண்ணில் நீர் வழியவில்லை, உதிரம் வழிகிறது. யாருக்கு ?

கையில் தனிச்சிலம்பும் = கையில் ஒரே ஒரு தனிச் சிலம்பு. சிலம்பு எப்போதும் ஜோடியாக இருக்கும். சிலம்பு வைத்து இருந்ததால் பெண் என்று தெரிகிறது.  இவள் கையில் ஒரே ஒரு சிலம்பு தனியாக இருக்கிறது.  சிலம்பை காலில் அணிவார்கள். இவளோ கையில் வைத்து இருக்கிறாள், அதுவும் ஒற்றை சிலம்பை ....அவள் யார் ?


ஆவி குடிபோன = ஆவி உடம்பில் குடி இருக்கும். உயிர் இந்த உடம்பில் நிரந்தரமாக இருக்காது. வாடகைக்கு குடி இருக்கும். அந்த ஆவி குடி போன மாதிரி இருக்கிறாள். உயிர் போய் விட்டால் எப்படி கையில் தனிச் சிலம்போடு இருக்க முடியும் ? ஒரு வேளை உயிருக்கு உயிரான யாரையோ இழந்து விட்டாளோ ? யாராக இருக்கும் இவள் ?

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

(இருக்க ஒரு வீடு  இல்லையோ இந்த உயிருக்கு என்பார் வள்ளுவர்....புக்கு + இல் ...)


அவ்வடிவம் = அந்த வடிவத்தை 

பாவியேன் = பாவியான நான் பார்த்தேன் 
 
காடெல்லாஞ் சூழ்ந்த = காடு யாரும் வளர்ப்பது அல்ல. அங்கே மரங்களும், செடி கொடிகளும் ஒரு ஒழுங்கு இல்லாமல் வளர்ந்து இருக்கும். எல்லாம் ஒன்றோடு ஒன்று பிண்ணி படர்ந்து சிக்கலாக கிடக்கும். மேலும், யாரும் வெட்டி விட்டு ஒழுங்கு படுத்தாததால், அடர்ந்து வளர்ந்து ஒரே இருண்டு கிடக்கும். கருப்பாக, இருண்டு, பிண்ணி, படர்ந்து இருக்கும்...அப்படி காடு எல்லாம் சூழ்ந்த 


கருங்குழலுங் கண்டஞ்சிக் = கரும் குழலை கண்டு அஞ்சி. அந்தப் பெண்ணின் கரிய, படர்ந்த, எண்ணெய் இட்டு படிய வாராமல் கலைந்து கிடக்கும் குழலை கண்டு அஞ்சி 
 
 
கூடலான கூடாயி னான் = கூடலான் கூடு ஆயினான். பாண்டிய மன்னன் உயிர் இழந்து வெறும் கூடு ஆன அந்த காட்சியை, பாவியான நான் பார்த்தேன். 

சிலப்பதிகாரம். இன்னொரு பொக்கிஷம். இரண்டாம் நூற்றாண்டில், இளங்கோ அடிகள் என்ற துறவியால்  எழுதப்பட்ட நூல். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள். தொடர் செய்யுளாக உள்ள நூல். அருவி போல் தமிழ் வார்த்தைகள் பொழியும் பாடல்கள். நேரம் கிடைத்தால் மூல நூலைப் படித்துப் பாருங்கள்.  

1 comment:

  1. மூல நூலை எங்கே படிக்கிறது?! இந்த blog-ஐப் படிப்பதே எங்கள் புண்ணியம். நன்றி.

    ReplyDelete