Wednesday, March 20, 2013

அபிராமி அந்தாதி - அன்னையும் ஆயினள்


அபிராமி அந்தாதி - அன்னையும் ஆயினள் 


பெண் ஒரு பெரும் சக்தி. 

பெண்ணில், தாய்மை எண்ணம் எப்போதும் ஓங்கியே இருக்கும் என்று நினைக்கிறேன். உயிரை உருவாக்குவதும், அதை காத்து போற்றுவதும் பெண்ணிற்கு இயல்பாகவே உள்ள குணம் என்று நினைக்கிறேன். 

அபிராமியை காணும் பட்டருக்கு இரண்டு எண்ணம் தோன்றுகிறது. அவள், சங்கரனின் மனைவி மட்டும் அல்ல, சங்கரனின் தாயாகவும் இருக்கிறாள். 

எப்படி மனைவியே தாயாகவும் இருக்க முடியும் ? 

அதுதான் பெண்மை. அவள் என்னவாக இருந்தாலும் தாயாக, அன்னையாக எப்போதும் இருக்கிறாள். 

ஒவ்வொரு மனவிக்குள்ளும் ஒரு தாய் இருந்து கொண்டே இருக்கிறாள்....பரிந்தெடுக்க, அரவணைக்க, அன்பு காட்ட...


பாடல் 

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் 
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், 
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம், 
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

பொருள் 


தவளே இவள் = தவம் செய்தவள் இவள் 

எங்கள் சங்கரனார் = எங்கள் சங்கரனார் 

மனை மங்கலமாம் = மனைக்கு மங்கலம்  சேர்ப்பவள். அவன் மனைவி.  
 
அவளே = அவளே 

அவர்தமக்கு அன்னையும் ஆயினள் = அவனுக்கு அன்னையும் ஆகினாள் 

ஆகையினால் = ஆகையினால் 
 
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை = இவளே கடவுள்கள் யாவர்க்கும் மேலானவள் 

இறைவியும் ஆம் = இறைவியும் ஆனவள் 
 
துவளேன் = வெவ்வேறு தெய்வங்களின் பின்னால் போய் துவண்டு போக மாட்டேன் 

இனி ஒரு தெய்வம் உண்டாக = இனி மேல் ஒரு தெய்வம் உண்டாக 

மெய்த் தொண்டு செய்தே = உண்மையான தொண்டு செய்தே. 


1 comment:

  1. "காலங்களில் அவள் வசந்தம்" பாட்டிலிருந்து ...

    "பால் போல் சிரிப்பதில் பிள்ளை, அவள்
    பனி போல் அணைப்பதில் கன்னி
    கண் போல் வளர்ப்பதில் அன்னை, அவள்
    கவிஞனாக்கினாள் என்னை"

    ReplyDelete