Sunday, March 3, 2013

இராமாயணம் - இதயச் சிறையில் வைத்தான்


இராமாயணம் - இதயச் சிறையில் வைத்தான் 


மயில் போன்ற சாயலை உள்ள சீதையை வஞ்சிப்பதற்கு முன், நீண்ட மதிலை உள்ள இலங்கையின் வேந்தன் அவளை தன் மனச் சிறையில் வைத்தான்.

வைத்தபின் என்ன ஆயிற்று என்றால், வெயிலில் வைத்த வெண்ணை போல் அவன் மனம் மெல்ல மெல்ல உருகிற்று.

பாடல்


மயிலுடைச் சாயலாளை வஞ்சியாமுன்னம், நீண்ட
எயிலுடை இலங்கை நாதன், இதயம் ஆம் சிறையில் வைத்தான்;
அயிலுடை அரக்கன் உள்ளம், அவ் வழி, மெல்ல மெல்ல,
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல், வெதும்பிற்று அன்றே


பொருள்


மயிலுடைச் சாயலாளை = மயில் போன்ற சாயலை உள்ள சீதையை

வஞ்சியாமுன்னம் = வஞ்சனையால் கவர்தர்க்கு முன்

நீண்ட எயிலுடை இலங்கை நாதன் = நீண்ட மதிலை உள்ள இலங்கையின் அரசனாம் இராவணன்

இதயம் ஆம் சிறையில் வைத்தான் = தன்னுடைய இதயம் என்ற சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் = வேல் படை கொண்ட அந்த அரக்கனின் உள்ளம்

அவ் வழி, மெல்ல மெல்ல = அந்த வழியில் மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற = வெயில் நாளில் வைத்த


வெண்ணெய்போல் வெதும்பிற்று அன்றே = வெண்ணை போல் வெதும்பலாயிற்று. வெதும்புதல் என்றால் சூட்டால் அவிந்து போதல், அழுகிப் போதல் என்று பொருள். காமம் மனதில் வந்த பின், அந்த சூட்டில் அவன் மனம் அழுகத் தொடங்கியது. கெட்டுப்  போகத் தொடங்கியது.

மனதிற்குள் என்ன வருகிறது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

மனம் பால் போன்றது. ஒரு துளி விஷம் விழுந்தால் எல்லா பாலும் கெட்டு போகும். திரிந்து போகும்.

ஒரு துளி தயிர் விழுந்தால் எல்லா பாலும் தயிராகப் போகும்.

நம் மனதில் மட்டும் அல்ல, நம் குழந்தைகளின் மனத்திலும் நல்லதே விழும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.










1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete