Tuesday, March 19, 2013

திருக்குறள் - இனியவை கூறல்


திருக்குறள் - இனியவை கூறல் 


அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி 
இனிய சொலின் 

(இனியவை கூறல் - 96ஆவது குறள் )

நல்லதை வேண்டி, இனிய சொற்களை கூறினால், துன்பம் தேய்ந்து இன்பம் பெருகும். 

அவ்வளவுதாங்க இந்த குறள். ஒரு கடினனமான வார்த்தையும் கிடையாது. 

இது ஒரு மேலோட்டமான கருத்து. ஆழமாக சிந்திக்க சிந்திக்க அர்த்தங்கள் பொங்கி வரும் ஊற்று திருக்குறள்.

இதில் என்ன ஆழமான அர்த்தம் ?

எல்லோருக்கும் இன்பம் வேண்டும். யாருக்கும் துன்பம் வேண்டாம். இதுதானே உலகில்  உள்ள   அத்தனை உயிர்களும் வேண்டுவது ? 

வள்ளுவர் அதற்க்கு வழி  சொல்லுகிறார் - ஏழே ஏழு வார்த்தைகளில் ....

முதலில் மற்றவர்களுக்கு நல்லதை நினை - "நல்லதை நாடி ". நாடி என்றால் விரும்பி என்று அர்த்தம். நோக்கம் நல்லதாய் இருக்க வேண்டும். யாருக்கு நல்லதை நாடி ? நமக்கு  நாம் நல்லததைத்  தான் விரும்புவோம். அதை சொல்லவே வேண்டாம்.  எனவே நம்மை   தவிர்த்து எல்லா உயிர்களுக்கும் நல்லதை நாடி. 

"இனிய சொலின்" சில பேர் நல்லதை கூட கடுமையாக சொல்லுவார்கள். சில வீட்டில் பிள்ளைகளை படிக்கச் சொல்லி பெற்றோர்கள் கண்டிப்பதை பார்க்கலாம்..."படிக்காட்டி, நீ உருப்படமாட்ட, மாடு மேய்க்கத்தான் போற, பிச்சை எடுக்கத்தான் போற " என்று எல்லாம் திட்டுவார்கள். நோக்கம் நல்லத்தான். நல்லதைத் தான் நாடுகிறார்கள். ஆனால் அதை இனிமையாகச் சொல்லுவது இல்லை. 

இப்படி நல்லதை நாடி, இனிமையாகச் சொன்னால் என்ன விளையும் ?

அறம் பெருகும்....இன்பம் பெருகும், செல்வம் பெருகும் என்று சொல்லி இருக்கலாம். அது என்ன அறம் பெருகும். அறம் என்ற சொல் அறு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. நல்லன இல்லாதவற்றை அறுத்து எரிந்து விட்டு, நல்லதை பெருக்கும். 

அல்லவை தேய - தீயவை தேய என்று கூட சொல்லவில்லை. தீது என்று சொல்லுவதே ஒரு இனிய சொல் அல்ல. எனவே, அல்லவை தேய என்கிறார். அதாவது நமக்கு தேவையில்லாதவைகள்  (துன்பம், தீமை ) தேய என்கிறார். 

இந்தக் குறளில்   சில மறைமுகப் பொருளும் உண்டு.

அதாவது, சில பேர் உதட்டளவில் இனிமையாகப் பேசுவார்கள். நெஞ்சு எல்லாம் நஞ்சாக இருக்கும். பேச்சு இனிமையாக இருந்தாலும், நோக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். கேட்டதை நாடி  இனிய சொல்லக் கூடாது என்பது ஒரு சொல்லாமல் சொன்ன பொருள். 

இரண்டாவது, நல்லதை நினைத்து கூட இனிமை இல்லாத சொல்லை சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் கேட்பவன் அந்த நல்லதை செய்யாமல் போனாலும் போகலாம். அது யாருக்கு நல்லது. நல்லதே ஆனாலும், அதை இனிமையாகச் சொல்ல வேண்டும். கடுமையாகச் சொல்லக் கூடாது. 


மூன்றாவது, நல்லவை நாடி இனிய சொன்னால், அல்லவை தேய்ந்து அறம்  பெருகும். கெட்டதை நாடி இனிய சொன்னாலோ, அல்லது நல்லவை நாடி இனிமை இல்லாதவற்றைச் சொன்னாலோ என்ன ஆகும் ? அப்படிச் செய்தால் அல்லவை வளர்ந்து, அறம் குறுகும் (வளராது ). 

கணிதம் படித்தவர்களுக்கு சற்று எளிமையாக இருக்கும்...இப்படி யோசித்துப் பாருங்கள் ...


அல்லவை - தேயும் , வளரும் 
அறம் - தேயும் , வளரும் 
நல்லவை நாடி, தீயவை நாடி 
இனிய சொலின், இனிமை இல்லாதவற்றை சொலின் 


மீண்டும் ஒரு முறை குறளை படித்துப் பார்ப்போம் ...

   
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி 
இனிய சொலின் 

3 comments:

  1. மிக நல்ல விளக்கம். இனிய விதத்தில் சொல்ல வேண்டும் என்பது எனக்கு முடிவும் பிடித்தது. நன்றி.

    ReplyDelete
  2. குரளை மட்டும் இல்லை உங்கள் விளக்கத்தையும் மீண்டும் மீண்டும் எல்லோரும் படிக்க வேண்டும். இவளவு விரிவான விளக்கம் படித்ததே இல்லை. நன்றி

    ReplyDelete
  3. பொருள் பொதிந்த விளக்கம்

    ReplyDelete