Wednesday, March 27, 2013

இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி


இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி  


அவதாரம் என்ற சொல்லுக்கு எது கீழே இறங்கி வர வேண்டிய அவசியமே இல்லாவிட்டாலும், கீழே இருப்பவர்களை மேலே ஏற்றிவிட வந்ததோ அது என்று பொருள் படும். 

திருமாலுக்கு இந்த பூமிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இங்குள்ள மக்களை மேலே உயர்த்தி விட அந்த சக்தி கீழே இறங்கி வந்தது. எனவே அது அவதாரம். 

இரு கை வேழத்து இராகவன்தன் கதை

வேழம் (யானை ) என்ன செய்யும்...தன் காலை பிடித்தவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி விடும். அது போல நம்மை கடைந்தேற்ற வந்த ஒரு சக்தி இராமன். 

நீங்கள் இறைவனை நம்புங்கள், நம்பாமல் இருங்கள். 

நீங்கள் இராமன் என்று ஒருவன் இருந்தான் என்பதை நம்புங்கள், அல்லது நம்பாமல் போங்கள்.

இராமாயணம் ஒரு கதை என்றே இருக்கட்டும். 

நான் எதற்கு இராமாயணம் படிக்க வேண்டும் ? வேற வேலை இல்லையா ? அதைவிட ஆயிரம் முக்கியமான வேலை இருக்கு...இது எல்லாம் தாத்தா பாட்டி  வயசுல படிக்க  வேண்டியது ..இப்ப என்ன அவசரம் என்று நினைக்கும் இளைய தலை முறைக்கு அவர்கள் வாழ்வை எதிர் கொள்ள உதவும் ஒரு அற்புதமான நூல்  கம்ப இராமாயணம். 

இளைய தலைமுறை தான் இதை முதலில் படிக்க வேண்டும். 

அந்த கதையில் வாழ்ந்த ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டி இருக்கிறான். 

நம் வாழ்வின் வரும் ஒவ்வொரு சிக்கலும் அவன் வாழ்விலும் வந்தது. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட பல மடங்கு துயரம் அவனுக்கு வந்தது. அவன் அவற்றை எப்படி எதிர் கொண்டான், எப்படி வாழ்ந்தான் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது 

தொழிலில் சின்ன நஷ்டம், வாங்கிய பங்கு (share ) விலை குறைந்து விட்டால், வீடு ஒரு மாதம் வாடகைக்கு  போகாமல் பூட்டி இருந்து விட்டால் ஏதோ உலகமே இருண்டு போன மாதிரி  கவலைப் படுகிறோம்....

நாம் மலை போல் நம்பிய ஒருவர் நம்மை கை விட்டால் நாம் எப்படி உடைந்து போவோம்..

உறவினர்களை, நண்பர்களை எப்படி அரவணைத்துப் போவது, பெரியோரிடம் மரியாதை, ஆசிரியரிடம் பக்தி, மனைவியிடம் அன்பு, அண்டியவர்களை காக்கும் உயர் குணம், மற்றவர்களின் உயர் குணங்களை பாராட்டும் நற்பண்பு, பொறுமை, வீரம், இதமாக பேசுவது, இனிமையாகப் பேசுவது, மக்களை எடை போடுவது, அன்பு பாராட்டுவது, மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வது , பாசம், இறை உணர்வு, என்று வாழ்வின் அத்தனை  பரிணாமங்களையும் தொட்டுச் செல்கிறது இராமன் என்ற அந்த கதா பாத்திரம். 

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டிச் செல்கிறது. 

வாழ்வில் சிக்கல் வரும்போது, துன்பம் வரும் போது , கவலை வரும்போது, இழப்புகளும், நட்டங்களும்  வரும்பொழுது என்ன செய்யலாம், எப்படி செய்யாலாம் , யாரக் கேட்கலாம் என்று நாம் தவிக்கும் போது, நமக்கு வழி காட்டியாய் இருப்பது இராமனின் வாழ்க்கை. 


கம்ப இராமாயணம் காட்டும் இராமனின் வாழ்க்கை நமக்கு எப்படி உதவும், வழி காட்டும், துன்பங்களை தாங்கிக் கொள்ள, சிக்கல்களை விடுவிக்க, எப்படி அது உதவும் என்ற  அடுத்து வரும் சில ப்ளாகுகளில் சிந்திப்போம். 



2 comments:

  1. கம்ப ராமாயண ராமனைப் பற்றி என் சிந்தனைகள் :

    1. ராமனுக்கு திருமணம் ஆகி விட்டது. ஒரு நாட்டின் இளவரசன்.ஒரு பெண் அவனை நம்பி இருக்கிறாள். இந்த நிலையில், ராமன், அவன் தந்தையின் இரண்டாம் மனைவியின் தூண்டுதலால், அவனை காட்டிற்கு செல்லச் சொல்லும் போது, ஒரு ஆண் மகனாக, மறுத்து இருக்க வேண்டும். 65000 பெண்களை வைத்துகொண்ட தசரதனுக்கு மரியாதை ஒரு கேடா ??? மூத்த பிள்ளை அரசாள்வது தானே நம் மரபு. தன் உரிமையை நிலைநாட்ட முடியாதவன் எப்படி வீரனாக இருக்க முடியும்? ஆக ராமனின் வீரம் இங்கு கேள்விக்குரியதாகிறது .

    2. வேறு ஒருவன் வந்து மனைவியை தூக்கிச் செல்லும் வரை, ராமன் என்ன செய்து கொண்டு இருந்தார்??? காட்டில் பூ பறித்து கொண்டு இருந்தாரா? காட்டில் பாதுகாக்க முடியாவிட்டால், அரண்மனையிலேயே விட்டு வந்து இருக்க வேண்டியது தானே? உடன் கூட்டி வந்தால் உரிய பாதுகாப்பு தர வேண்டும் அல்லவா? என்னைப் பொறுத்த வரை, அப்பொழுதே ராமன் தோற்றுப் போய்விட்டார் என்று தான் கொள்ள வேண்டும். இனிமேல் போர் செய்து, ராவணனைக் கொன்றாலும், இந்தப் பழி நீங்காது!

    3. போர் நடக்கிறது. அப்பொழுது ராவணனிடம் ராமன் சொல்கிறார் , "இன்று போய் நாளை வா"!!! தன் மனைவியைக் கடத்தி வைத்திருப்பவனுக்கு நேரம் கொடுப்பவன் எத்தகைய மனிதன்? நீங்களே யோசித்து கொள்ளுங்கள்!!

    4. ஊருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன் மனைவியை தீயில் கொளுத்துவது அநியாயம். மேலும், இறுதியில், கர்ப்பமாக இருக்கும் மனைவியை, காட்டிற்கு விரட்டி விடுவது ஒரு மனிதன் செய்யும் காரியமே இல்லை.இது தான் அரக்க குணம். ஒரு நல்ல ஆண், தன் மனைவிக்காக உயிரையே கொடுக்க வேண்டும். இப்படி ஊரார் பேச்சை கேட்டு தன் மனைவியை விரட்ட கூடாது. ராமனுக்கு இராவணன் மேல்!!!

    ReplyDelete
  2. ராமா... உன் அவதாரத்தின் அவசியத்தை ஒரு சில மக்கள் உணர மறுக்கிறார்கள். தர்மத்தை நிலைநாட்டவே நீ அவதரித்து இம் மண்ணில் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்களால் கண்டும் கூட இராவணனை புகழ்கிறார்களே..! யார் எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும்.
    என் நினைவெல்லாம் நீயே.!!
    ராமா.. ராமா...ராமா..

    ReplyDelete