Monday, March 25, 2013

சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும்


சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும் 


அவள்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா ?

தோழி: ம்ம்..சொல்லு...என்ன விஷயம்

அவள்: அவனுக்கு வர வர என் மேலே அன்பே இல்லைன்னு தோணுது

தோழி: ஏன், என்ன ஆச்சு ...

அவள்: அப்ப எல்லாம் என் பின்னாடி எப்படி சுத்துவான் ? இப்ப என்னடானா , கண்டுக்க கூட மாட்டேங்கிறான்....

தோழி: அப்படி எல்லாம் இருக்காது...அவனுக்கு என்ன பிரச்சனையோ....கொஞ்சம் பொறு...

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

சீர் பிரித்தபின்


காதலராகி கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யான் அறியோம் ஐய 
மாதரார் கண்ணும் மதி நிழல் நீரினை கொண்டு மலர்ந்த நிலப் 
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகார் எம்மூர் 

பொருள்

காதலராகி = காதலராகி

கழிக் கானற் = மிக விரும்பி காண்பதற்கு


கையுறை = பரிசு பொருள்கள்

 கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு என் பின் வந்தார்

ஏதிலர் தாமாகி = (இன்னைக்கு என்னடா என்றால் ), ஏதோ அயலானைப் போல

யாம் இரப்ப நிற்பதை = நான் விரும்பி வேண்டி நின்றாலும்

 யான் அறியோம் ஐய = அறியாதவர் போல் நிற்கிறார்

மாதரார் கண்ணும் = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலை

 நீரினை கொண்டு = நீரில் கொண்டு

 மலர்ந்த = மலர்ந்த

 நிலப் போதும் = மலர்களை (போது = மலர் )

அறியாது = எது என்று அறியாது

வண்டு ஊசலாடும் = வண்டு ஊசலாடும்

புகார் எம்மூர் = புகார் எங்கள் ஊர்

வண்டுகள் பெண்களின் முகத்திற்கும், நிலவின் நிழல் சேர்ந்த நீரில் உள்ள மலருக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும்  வண்டுகள் உள்ள ஊர் எங்கள் ஊர்.

அந்த வண்டு மாதிரி இந்த தலைவனும், நான் என்று நினைத்து வேறு எவ பின்னாடியோ போய் விட்டானோ என்பது தொக்கி நிற்கும் பொருள்.



1 comment:

  1. இந்த வண்டுகளின் மயக்கம் ஒரு இனிமையான கற்பனை! மிக ரசித்தேன்.

    ReplyDelete