Tuesday, April 2, 2013

இராமாயணம் - பதவி வரும் போது

இராமாயணம் - பதவி வரும் போது 


பதவி இழந்த போது இராமன் எப்படி இருந்தான் என்று பார்த்தோம்.

பதவி வரும் போது இராமன் எப்படி இருந்தான் என்று தெரிய வேண்டாமா ?

நமக்கு பதவி வருகின்றதென்றால் எப்படி இருப்போம் ? சந்தோஷமாக இருப்போம்....மற்றவர்களை விடுத்து நமக்குத் பதவி உயர்வு தருகிறார்களே என்று பெருமிதம் கொள்வோம், இத்தனை நாள் தராததே பெரிய குற்றம் என்று அங்கலாய்த்துக் கொள்வோம்...

என்றாவது பதவி உயர்வு நமது கடமை என்று நினைத்தது உண்டா ? பெரிய பதவி என்பது பெரிய பொறுப்பு என்ற கடமை உணர்வு எழுந்தது உண்டா ? நமக்கு மேலும் பொறுப்புகள் கொடுக்கப்படிருகின்றன என்று நினைத்தது உண்டா ?

பதவி உயர்வு, வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இராமன் ஒரு உதாரணம்.

தசரதன், சக்கரவர்த்தி பட்டம் உனக்குத்தான் என்று இராமனிடம் சொன்னபோது இராமன், அந்தப் பதவியின் மேல் ஆசையும் படவில்லை, அதை வெறுக்கவும் செய்யவில்லை. இது தனது கடமை என்று நினைத்தான். கடமை மட்டும் அல்ல, அரசனின் கட்டளை என்று கொண்டான்.

பாடல்



தாதை, அப் பரிசு உரைசெய,
    தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
    ‘கடன் இது’ என்று உணர்ந்தும்,
‘யாது கொற்றவன் ஏவியது
    அது செயல் அன்றோ,
நீதி எற்கு?’ என நினைந்தும்,
    அப் பணி தலைநின்றான்.




பொருள்






தாதை = தந்தையாகிய தசரதன்

அப் பரிசு உரைசெய = நீ பட்டம் ஏற்க வேண்டும் என்று சொன்னவுடன்

தாமரைக் கண்ணன் = தாமரை போன்ற கண்களை உடைய இராமன்

காதல் உற்றிலன் = அந்தப் பதவியின் மேல் ஆசை கொள்ளவில்லை


இகழ்ந்திலன் = அதை வெறுக்கவும் இல்லை

‘கடன் இது’ என்று உணர்ந்தும் = கடமை இது என்று உணர்ந்து

‘யாது கொற்றவன் ஏவியது = எது அரசன் இட்ட கட்டளையோ

அது செயல் அன்றோ = அது தான் செயல்

நீதி எற்கு?’ என நினைந்தும் = தர்மமும் கூட

அப் பணி தலைநின்றான் = அந்த பணியை தலைமேற் கொண்டான்

விருப்பு வெறுப்பு இல்லாமல், இலாப நஷ்டம் எதிர்பார்க்காமல் கடைமையை செய்யச் சொன்னான் கிருஷ்ணன் கீதையில் சொன்னான். இராமன் அதை வாழ்ந்து காட்டினான்.






1 comment:

  1. இந்த பாடலில் ‘கடன் இது’ என்பதற்கு கடமை இது எனும் கருத்து சரியாக பொருந்தினாலும், கால ஓட்டத்தில், கடன் என்பதும் கடமை என்பதும் இரு வேறு பொருளாக, முன்னது செய்ய வேண்டுமே என்று ஒரு சலிப்புடன் செய்வதும், பின்னது எந்த வித உணர்ச்சியும் ஆட்கொள்ளாது ஒரு வேலையை ஆற்றுவதாகவும் கொள்ளுமாறு பலர் உரைக்க கேட்டிருக்கிறேன். இதை படிக்கையில் கடனும், கடமையும் ஒரு பொருளுக்கு இரு வேறு சொற்களாகத்தான் தெரிகிறது. அப்படித்தானே?

    ReplyDelete