Sunday, April 21, 2013

இராமாயணம் - செவி சுடச் தேம்புவாள்


இராமாயணம் - செவி சுடச் தேம்புவாள்

வார்த்தைகள் கம்பனிடம் கை கட்டி ஊழியம் பண்ணுகின்றன. அவன் நினைக்கும் போது என்னை எடுத்துக்கொள், என்னை எடுத்துக்கொள் என்று ஒவ்வொரு வார்த்தையும் வந்து வரிசையில் நிற்கும் போல இருக்கிறது.

தன் கணவன் பெரிய மன்னாதி மன்னனாகப் போகிறான் என்று நினைத்து இருந்தவளிடம், அரசு கிடைக்காதது மட்டும் அல்ல, கானகம் வேறு போக வேண்டும் என்று சொல்கிறான் இராமன்.

நீ வரவேண்டாம்.இங்கேயே இரு....நான் போய் வருகிறேன் என்றான்.

சாதாரண பெண்ணாய் இருந்தால் அரச பதவி போச்சே என்று வருத்தப் பட்டிருப்பாள்.

சீதை அரசு போனதற்காக வருந்தவில்லை. இராமனை விட்டு பிரியப் போகிறோமே என்று வருந்தினாள் . அதுவும் எப்படி தேம்பி தேம்பி அழுகிறாள். சின்ன குழந்தைகள் எப்படி நினைத்து நினைத்து தேம்புமோ அப்படி தேம்பி அழுகிறாள்.


சுடு  சொல் என்று கேட்டு இருக்கிறோம். சுடு சொல் என்றால் தீமையான சொல் என்று பொருள் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

கம்பன் சொல்கிறான், "நீ இங்கேயே இரு" என்று இராமன் சொன்ன சுடு சொல் சீதையின்  செவியை சுட்டதாம்.

சொல் சுடும். வள்ளுவனும் சொல்லுவான் "தீயினார் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினார் சுட்ட வடு" என்று.

சொல் சுடும்.

அசோக வனத்தில் சீதை சொல்லுவாள் ...

""எல்லை நீத்த இந்த உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் , அது தூயவன்  வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் " என்று.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொல் சுட்டுவிடும்.


பாடல்


நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேய மண் இழந்தான் என்றும், விம்மலன்;
'நீ வருந்தலை; நீங்குவென் யான்' என்ற
தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள்.


பொருள்






நாயகன் = இராமன்

வனம் = கானகம்

நண்ணல் உற்றான்  = என்ன ஒரு அருமையான வார்த்தை. நண்ணுதல்  என்றால் நெருங்குதல் என்று பொருள். நண்பன் என்றால் நெருங்கியவன். இராமன் கானகத்தை நெருங்கி விட்டான் என்று முடிவு செய்து விட்டாள்  சீதை. "இன்றே விடையும் கொண்டேன்" என்று சொல்லிவிட்டு அல்லவா இராமன் வந்தான் 

என்றும் = அதற்க்கும்

மேய மண் இழந்தான் = மேய்த்தல் என்றால் காத்தல், கட்டுக்குள் வைத்தல். காக்கும் மண்ணை இழந்தான்

என்றும், விம்மலன்; = என்று அதற்க்கும் அழவில்லை. இராஜ்ஜியம் போனதற்கு வருத்தம் இல்லை, கானகம் போகவும்  வருத்தம் இல்லை.

'நீ வருந்தலை; நீங்குவென் யான்' என்ற = நீ வருந்தாதே, நான் போகிறேன் என்ற

தீய வெஞ் சொல் = தீய வெம்மையான சொல்

செவி சுடத் தேம்புவாள். = செவியை சுட, தேம்பினாள்

தான் துன்பப் பட்டாலும் பரவாயில்லை, மனைவி துன்பப் படக் கூடாது என்று நினைக்கும்  கணவன்.

அவன் தனியாகப் போய்  துன்பப்படுவானே என்று உருகும் மனைவி. இன்பமோ துன்பமோ, "நான் உன்னோடு இருக்கிறேன்" என்று சொல்லும் மனைவி.

அப்படி ஒரு அன்யோன்யம். இவ்வளவு அன்பு இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக  இருக்கும்.

இப்படி ஒரு மனைவி வைத்தால், 14 வருடம் என்ன வாழ்நாள் முழுதும் கானகத்திலேயே கழிக்கலாம்.


இராமன், சீதையை அழைத்து செல்வதாய் இல்லை. "நின் பிரிவினும் சுடுமோ வெங்கானம்"  என்று சண்டை போட்டு பார்த்து விட்டாள் . இராமன் அசைவதாய் இல்லை.

எல்லா பெண்களும் உபயோக்கிக்கும் பிரம்மாஸ்திரத்தை எடுக்கிறாள் சீதை.

வேறு வழி இல்லாமல் இராமன் ஒத்துக் கொள்கிறான்

அது என்ன அஸ்த்திரம் ?




2 comments:

  1. கம்பனை பாராட்றதா இல்லை அதற்கு இவ்வளவு அழகா அனுபவித்து விளக்கம் எழுதும் உன்னை புகழ்வதா? பட்டிமன்றம் வைக்கலாம்

    ReplyDelete
  2. "தீய வெஞ்சொல்" - அந்த சொல் வெம்மையானது மட்டும் அல்ல, தீயதும் கூட. அது யார் பார்வையிலிருந்து தீயது? சீதை பார்வையிலா, கம்பன் பார்வையிலா?!?

    அருமையான பாடல். நல்ல விளக்கம். அனுபவிக்கும் வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.

    ஒரு சிறிய குறிப்பு: "விம்மலன்" அல்ல, "விம்மலள்" என்றிருக்க வேண்டும். தட்டச்சுப் பிழை.

    ReplyDelete