Tuesday, April 23, 2013

பிரபந்தம் - மூப்பு வரு முன்


பிரபந்தம் - மூப்பு வரு முன் 


மூப்பு என்பது ஏதோ ஒரு நாள் வரப்போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வரும்போது பார்த்துக் கொள்ளலாம். நான் இப்போது திடமாகத்தானே இருக்கிறேன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்

 அது என்ன ஒரு நாளில் வருவதா ?

அடுத்த வரும், ஜனவரி மாதம் இருபதாம் தேதியில் இருந்து  நீ வயதானவன் ஆகிவிடுவாய் என்று யாரவது சொல்லுவார்களா நம்மிடம் ?

இல்லை.

மூப்பு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் வயதானவர்கள் ஆகிக் கொண்டே இருக்கிறோம்.

மூப்பு ஒரு நாளில்  நிகழ்வது இல்லை...வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதற்கு.


 பாடல்

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.(968)


 பொருள்





முற்றமூத்துக் = நன்றாக முதிர்ந்து.

கோல்துணையா = கோல் துணையாகக் கொண்டு

முன்னடிநோக்கிவளைந்து = முதுகு வளைந்து முன்னால் இருக்கும் அடியை பார்ப்பது போல் வளைந்து


இற்றகால் போல் = கால் இற்றுப் போய்

தள்ளி = மெல்ல மெல்ல தள்ளி

மெள்ள இருந்தங்கிளையாமுன் = மெள்ள  இருந்து அங்கு இளையாமுன். இருந்து எழுந்திரிப்பதர்க்கு கூட மூச்சு வாங்கும்

பெற்றதாய்போல்வந்த = பெற்ற தாய் போல வந்த

பேய்ச்சி =  பூதகி என்ற அரக்கியின்

 பெருமுலையூடு = அவளின் முலை வழியே


உயிரை வற்ற வாங்கி யுண்ட = வற்ற வாங்கி உண்ட

வாயான் = வாயை உடையவனின்

வதரி வணங்குதுமே = ஸ்ரீ பத்ரிநாத்தை வணங்குதுமே

2 comments:

  1. இதற்கு என்ன பொருள்? பேச்சிக்கு வயது ஆகுமுன்னம், அவளது உயிரை எடுத்துவிட்டார் என்று பொருளா? அப்படி என்றால், பேய்ச்சி கொடுத்து வைத்தவள், முதுமையிலிருந்து தப்பி விட்டாள் என்றாகுமே?

    ReplyDelete
    Replies
    1. இதற்குப் பொருள், முதுமை என்றோ வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது....முதுகு வளையுமுன் , இருப்பதும் எழுந்திரிப்பதும் கூட பெரிய வேலை என்ற நிலை வருமுன், கை கால்கள் திடமாக இருக்கும் போது அவனை வணங்க வேண்டும்.

      இரை தேடும் போது இறையும் தேடு என்பது பொருள்.

      Delete