Friday, May 10, 2013

அபிராமி அந்தாதி - பனிமுறுவல்

அபிராமி அந்தாதி - பனிமுறுவல் 



அபிராமியின் அழகு சொல்லி முடியாது.

பவள கொடியில், சிவந்த பழம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அவளின் இதழ்கள்.

அவள் புன்னகை பனி போல் சில் என்று இருக்கும். கசிந்து உருகும். உருக்கும்
அந்த இதழ்களில் புன்னகை தவழும் .

இந்த கொடி போன்ற உடல், அதில் சிவந்த இதழ், அந்த இதழில் தவழும் புன்னகை....இவற்றோடு இன்னும் கொஞ்சம் ....

உடுக்கு போல சின்ன இடை....அந்த இடையின் மேல், அந்த இடுப்பை வளைக்கும் பாரம் இரண்டு மார்பகங்கள்....

இவை எல்லாம் கொண்டு சங்கரனிடம் கலவி என்ற போருக்குப் போனாள் ...சங்கரன் துவண்டு விட்டான் பாவம்....இத்தனை அழகை அவனால் எப்படி தாங்க முடியும்...மன்மதனை கண்ணால் எரித்தவனும் எங்கள் அபிராமியின் கண்களின்  முன் மண்டியிட வேண்டியதுதான்....

பாடல்

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

பொருள்






பவளக் கொடியில் = பவளக் கொடியில்

பழுத்த செவ்வாயும் = பழுத்த - மென்மையான, இனிப்பான, செவ்வாய்

பனிமுறுவல் = சில் என்று சிலிர்க்க வைக்கும் புன்னகை

தவளத் திரு நகையும் = முன்பே முறுவல் என்று புன்னகையை சொல்லிவிட்டதால், இங்கு அணிகலன்கள் என்று கொள்ளலாம்

துணையா = இவற்றை துணையாகக் கொண்டு


எங்கள் சங்கரனைத் = எங்களுடைய சங்கரனை

துவளப் பொருது = அவன் துவண்டு போகும் படி பொருந்தி, (பொருதல் = சண்டை இடுதல். வாரணம் பொருத மார்பும் என்பார் கம்பர் இராவணனை பற்றி கூறும் போது )


துடியிடை சாய்க்கும் = அவள் சங்கரனை சாய்த்தாள் . அவளுடைய உடுக்கை போன்ற இடையை சாய்த்தது ஒன்று உண்டு


 துணை முலையாள் = அது அவளின் ஒன்றோடு ஒன்று துணையான அவளின் மார்புகள்

அவளைப் பணிமின் = அந்த அபிராமியக் பணியுங்கள்

கண்டீர் = பணிந்தால் என்ன சொர்க்கம் கிடைக்குமா என்றால், இல்லை

அமராவதி ஆளுகைக்கே = அந்த சொர்கமே உங்கள் ஆளுகைக்கு உள்ளே வந்து விடும். நீங்கள் தான் அந்த சொர்கத்தின் இராஜா.

என்ன படிச்சு என்ன பிரயோஜனம், அவன் (ள் ) தாள் வணங்கவிட்டால் என்பார் வள்ளுவரும். (கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின்)

பணிகிறோம் என்ற அகந்தை இல்லாமல் பணியுங்கள். பணியில் பணிமின்.



1 comment:

  1. பொருது என்பதற்கு இன்னொரு பொருள் சொல்லத் தோன்றுகிறது, ஆனால் இங்கே எழுதக்கூடாது!

    ReplyDelete