Friday, May 31, 2013

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம்

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம் 


(வயது வந்தவர்களுக்கு மட்டும்).

இந்த பாடலை படிக்குமுன் இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று, இந்த பாடல் எழுதப்பட்டது முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில். அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாவது, இதை எழுதியது இளங்கோவடிகள் என்ற துறவி.

காதலன், அவனுடைய காதலியிடம் செல்லமாக கோவிக்கிறான்....நீயும் உன் குடும்பமும் கொலைகார குடும்பம்.


பாடல் 


கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 

பொருள் 

உன் சகோதரர்கள்  கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள் . நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்.  


(மிடல் = வலிமை, திண்மை ; இடுகும் = சிறுக்கும்; இழவல் = வருந்துதல், நட்டப்படுதல். இழவு என்றால் உயிரை இழத்தல்)


பாடல் 


கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 


பொருள் 

உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார்.



பாடல் 

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." 

பொருள் 

மீன் பிடிக்கும் படகில்   சென்று உயிர்களை  உன் தந்தை. நீயோ வளைந்த உன் புருவத்தால் உயிர்களை கொல்லுகிறாய் . மத்தவங்க பெருமையையும் துன்பத்தையும் நீ எங்க பார்க்கிறாய் ? உன் மார்புகளை சுமந்து வாடும் உன் இடையின் கஷ்டத்தையாவது நீ பார். 

இளங்கோ அடிகளுக்குத்தான் என்ன கரிசனம் ! 


1 comment:

  1. என்ன அற்புதமான மூன்று பாடல்கள்!

    இந்த மாதிரித் துறவிகளுக்கு எல்லாமே தெரியும் போலும்!

    "உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வை" - அருமையான வரி. உடலிலே புகுந்து, உயிரைக் கொன்று, நீ வாழ்கிறாய்!

    ReplyDelete