Wednesday, May 29, 2013

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம்

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம் 



நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

இனிமையான சொல் என்ன செய்யும் தெரியுமா ?

நாம் ஒருவருக்கு ஒரு  சொல்லை சொல்கிறோம் என்றால் அது அவர்களுக்கு நல்ல பயனைத் தரவேண்டும். பயன் தருகிறது என்று பண்பில்லாத சொற்களை பேசக் கூடாது...."எருமை, நீ படிகாட்டா நாசமாத்தான் போவ ..." என்பது பயன் தரும் பேச்சாக இருக்கலாம் ஆனால் பண்பில்லாத பேச்சு.

பண்புடனும் இருக்க வேண்டும். பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி பேசினால், நமக்கு என்ன கிடைக்கும் ?

அப்படி பேசுபவர்களுக்கு நல்லதும், அப்படி உங்கள் பேச்சை கேட்டவர்களின் நன்றியும் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே, இனிய சொல் தருபவருக்கும் பெறுபவருக்கும் நல்லது செய்யும்.

இன்னும் கொஞ்சம் விரித்து பொருள் பார்க்காலாம்.

இனிய சொற்களை கூறுவோருக்கு இரண்டு பலன் என்று பார்த்தோம்

நயன் ஈன்று நன்றி பயக்கும்.

நயன் என்றால் இலாபத்துக்கு உரியவன் (benefactor ) என்று பொருள். அவனுக்கு நன்மை கிடைக்கும். நன்மை என்றால் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் கிடக்கும் நன்மை என்று சொல்லுவார் பரிமேல் அழகர்.

நன்றி பயக்கும் = நன்றி என்றால் என்ன என்று தெரியும். அது என்ன பயத்தல் ? பயத்தல் என்றால் விளைதல், உருவாதல். விதை விதைத்தால் கனி கிடைக்கும் அல்லவா அதற்கு பயத்தல் என்று பொருள்.   ( பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று என்பது கம்ப இராமாயணம். நம்மை பெற்று, காப்பாற்றி வளர்த்தாள் (கைகேயி) அவள் பிழை அன்று.  )

இனிய சொல்லை சொன்னவர்களுக்கு நன்மையையும் (இம்மைக்கும் மறுமைக்கும்), சொல் கேட்டவர்களின் நன்றியும் கிடைக்கும்.

 எந்த மாதிரி சொல் தெரியுமா இதைத் தரும் ?

கேட்பவர்களுக்கு பயன் தரவேண்டும் - பொருள் பயன் என்பது பொதுவாகச் சொல்லப் பட்டாலும், வேறு எந்த விதத்திலாவது பயன் தர வேண்டும். (பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் என்பார் வள்ளுவர் )

பயன் தரும் சொல்லும் பண்போடு பிரியாமல் இருக்க வேண்டும். இந்த பண்பும் பயனும் பிரியாமல் இருக்க வேண்டும்.

அது என்ன பிரியாமல் ?

"நல்ல படிடா....இல்லைனா நாசமாத்தான் போவ " இதில் முதல் பகுதி பயன் தருவது. பண்பு உள்ளது. இரண்டாவது பகுதி பண்பு இல்லாதது, முதலாவதோடு  சேர்ந்து படிக்கும் போது பயன் தரலாம். அது சரி இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஒவ்வவொரு சொல்லும் பயனும், பண்பும் உள்ளதாய் இருக்க வேண்டும்.

பண்பில்லாத சொற்களை சொல்லி அதன் மூலம் பயன் வந்தால் கூட, பயன் பெற்றவர்கள் அதை  பெரிதாக நினைக்க மாட்டார்கள். "என்னை எப்ப பாரு கரிச்சு கொட்டி கொண்டே இருந்தான் " என்று பண்பில்லாத சொற்கள் தான் ஞாபகம் இருக்கும். பயன் உள்ள சொற்கள் மறந்து போகும்.

எனவே எப்போது சொன்னாலும்,பயனையும் பண்பையும் சேர்த்து சொல்லுங்கள்

பாடல்


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்





நயன்ஈன்று = நன்மைகளை தந்து

நன்றி பயக்கும் = நன்றிகளை பெற்றுத் தரும்

பயன்ஈன்று  = பயன் தரக்கூடிய

பண்பின் = பண்புடன்

தலைப்பிரியாச் சொல்.= கூடிய (பிரியாத) சொல்

1 comment:

  1. ஒன்னரை அடிக்குள்ள இவ்வளவு விஷயமா?

    ReplyDelete