Friday, May 3, 2013

அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்


அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்



அன்பு வயப்பட்டவர்கள் அறிவார்கள் ஈருடல் ஓருயிர் என்றால் என்ன. அன்பு இணைக்கும் பாலம். அன்பு கரைக்கும் இரசவாதம். ஒன்றில் ஒன்று கரைவது அன்பு. நீரையும் எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி வைத்தாலும் அது ஒன்றோடு ஒன்று பொருந்தாது. தனித் தனியாக நிற்கும்.

இரண்டு பொருளை நாம் சரியாகப் பொறுத்த வில்லை என்றால் அது கட கட என்று ஆடிக் கொண்டிருக்கும். சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். சில சமயம் கழண்டு கூட விழுந்து விடும்.


ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தி விட்டால் இரண்டும் சேர்ந்து ஒன்றாக செயல் படும்.



மனித மனம் ஒரு நிலையில் நில்லாதது. அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். அரை நிமிடம் கூட அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது.



சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி 


என்று கூறுவார் அருணகிரிநாதர்

என்னதான் முயற்சி செய்தாலும் சிறை படா நீர் போல் என்று மாணிக்க வாசகர் சொன்னது போல் மனம் நீர் போல் கசிந்து போய் கொண்டே இருக்கிறது.

ஒரு இடத்தில் பொருந்தி நிற்காது.

இறைவனோடு நாம் எப்படி பொருந்தி இருப்பது ? ஒன்று நாம் இறைவனை அடைய வேண்டும். அல்லது இறைவன் நம்மை வந்து அடைய வேண்டும்.

நாம் இறைவனை அடைவது என்பது நடவாத காரியம். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று நமக்குத் தெரியாது.

நாம் யார், எங்கே இருக்கிறோம்,, எப்படி இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியும்.

எது எளிது ?

நாம் அவனைத் தேடித் போவதா ? அவன் நம்மை தேடி வருவதா ?

இறைவன் நம்மை வந்து அடைவது எளிது.


பட்டர் கூறுகிறார்...நான் உன்னை வந்து அடைவது என்பது நடவாத காரியம். பேசாமல் நீ வந்து  என் மனதில் இரு என்று அபிராமியிடம்  கூறுகிறார்.

அதுவும் தனியா வராத, வரும்போது உன் கணவனையும் அழைத்துக் கொண்டுவா. இல்லை என்றால், திரும்பியும் உன் கணவனை பார்க்க போய் விடுவாய். நீங்க இரண்டு பெரும் ஒன்றாக வந்து என் மனதில் இருங்கள். அப்பத்தான் திரும்பி எங்கேயும் போக மாட்டீங்க. 

மனிதர்களும், தேவர்களும், மாயா முனிவர்களும் அவர்கள் வேறு, அபிராமி வேறு என்று நினைத்து அவளை அவர்கள் வணங்குகிறார்கள்.

பட்டர் அறிவார். அவர் வேறு அவள் வேறு அல்ல.

பாடல்



மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்






மனிதரும் = மனிதர்களும்

தேவரும் = தேவர்களும்

மாயா முனிவரும் = இறப்பே இல்லாத முனிவர்களும்

வந்து = உன் அருகில் வந்து

சென்னி = தலை

குனிதரும் = குனிந்து வணங்கும் 

சேவடிக் = சீரிய திருவடிகளை கொண்டவளே

கோமளமே = உயர்ந்தவளே

.கொன்றை வார்சடைமேல் = கொன்றை மலரை அணிந்த சடையில்

பனிதரும் திங்களும் = பனி பொழியும் நிலவையும்

பாம்பும் = பாம்பையும்

பகீரதியும் = பகீரதி என்ற ஆகாய கங்கையையும்

படைத்த = கொண்ட

புனிதரும் = புனிதரான சிவா பெருமானும்

 நீயும் = அபிராமியே, நீயும்

என் புந்தி எந்நாளும் பொருந்துகவே  = என்னுடைய புத்தியில் வந்து எப்போதும் பொருந்தி  நில்லுங்கள்.



1 comment:

  1. "மனதில்" என்று சொல்லாமல், "புத்தியில்" என்று சொல்வது ஒரு ஆச்சரியம்.

    ReplyDelete